மடு பிரதேசத்தில் பெருந்தொகையான காணி ராணுவத்தின் வசமுள்ளது

மன்னார் – மடு பிரதேச செயலக பிரிவில் காணப்படும் 48 ஏக்கர் காணி பாதுகாப்பு தரப்பிடம் உள்ளதாக மடு பிரதேச செயலக புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வவுனியாவை தளமாகக் கொண்டு இயங்கும் அன்புக்கும் நட்புக்குமான வலையமைப்பு எனும் அமைப்பானது, குறித்த பிரதேச செயலக பிரிவில் பாதுகாப்பு தரப்பால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணி விபரங்களை தருமாறு கோரி தகவல் அறியும் சட்டத்தின் மூலம் விண்ணப்பித்திருந்தது. குறித்த விண்ணப்பத்திற்கு பதிலளிக்கும் வகையில் பிரதேச செயலகத்தால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே மேற்படி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தம்பனைக்குளம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான 1 ஏக்கர் காணி மற்றும் பரசன்குளம், தட்சணாமருதமடு, தம்பனைக்குளம், பன்னவெட்டுவான், மடுவீதி ஆகிய இடங்களில் உள்ள அரச காணிகள் 27 ஏக்கரை இராணுவமும், தம்பனைக்குளம் மற்றும் மடு வீதி ஆகியவற்றில் காணப்படும் 6 ஏக்கர் அரச காணியை பொலிஸாரும் கையகப்படுத்தியுள்ளனர்.

அத்துடன் சின்னப்பண்டிவிரிச்சான், தட்சணாமருதமடு, கீரிசுட்டான் ஆகிய பகுதிகளில் வன இலாகாவிற்கு சொந்தமான 14 ஏக்கர் காணியையும் ராணுவம் சுவீகரித்து வைத்துள்ளது. இவ்வாறாக மடு பிரதேச செயலக பிரிவில் 48 ஏக்கர் காணி பாதுகாப்பு தரப்பால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக குறித்த புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

Related Posts