தெஹிவளையில் தமிழ் மாணவர்கள் ஆறுபேர் கடத்தப்பட்டு கப்பம் கோரப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை நிறுத்துமாறு பொலிஸ்மா அதிபர் ஊடாக ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அழுத்தம் கொடுத்து வருகின்றார் என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க குற்றஞ்சாட்டினார்.
இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் நேற்று கருத்து வெளியிட்ட அவர்,
உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு இராணுவத்தினர் பங்களிப்பு வழங்கினர். யுத்த வரலாற்றை எடுத்துக்கொண்டால், அது பற்றி பலகோணங்களில் கருத்துக்களை வெளியிடலாம்.
யுத்தம் என வரும்போது அதில் ஈடுபடும் இருதரப்பும் தமது தரப்பு வெற்றியை உறுதிசெய்துகொள்வதற்காக தார்மீகத்தன்மையை – விதிமுறைகளை இழக்கின்றனர்.
போரின்போது இது பொதுவானதொன்றாகும். யுத்தத்தின்போது பயன்படுத்த வேண்டிய அதிச உச்ச எல்லையையும் தாண்டி செயற்படுகின்றன என்பதை இந்த உலகமே ஏற்றுக்கொண்டுள்ளன.
யுத்த சூழலில் யுத்தத்துடன் சம்பந்தப்படாத பிள்ளைகள் கடத்தப்பட்டுக் கப்பம் கோரப்பட்டமை போன்ற சம்பவங்களை ஏற்றுக்கொள்ளவோ – அனுமதிக்கவோ முடியாது.
யுத்தத்தில் நடக்காத அதனுடன் தொடர்புபடாத ஒரு விடயம் சம்பந்தமாக முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னாகொடவின் முறைப்பாட்டுக்கு அமைவாக குற்றத்தடுப்பு பிரிவு விசாரணை முன்னெடுத்து வருகின்றது.
கரன்னாகொட தனது முறைப்பாட்டில், சம்பத் எனும் கடற்படை அதிகாரியின் தங்குமிடத்தை பரிசோதனை செய்தபோது அங்கிருந்து 7 இலட்சத்து 60ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலையொன்றும், 9 இலட்சம் ரூபா பெறுமதியான இரு ஆவணங்களும் நான்கு காசோலைப் புத்தகங்களும் மீட்கப்பட்டன என்று குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன் 3 தொலைபேசிகளும் 7.62 மில்லிமீற்றர் அளவான 436 துப்பாக்கி ரவைகளும், 9 மீல்லிமீற்றர் அளவான 50 துப்பாக்கி ரவைகளும் முன்னாள் கடற்படைத்தளபதி கரன்னாகொடவின் காலாவதியான அடையாள அட்டையொன்றும், வேறு நபர்கள் நால்வருடைய தேசிய அடையாள அட்டைகளும், கடவுச்சீட்டு மற்றும் கடன் அட்டை என 14 பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாகவும் தனது முறைப்பாட்டில் சுட்டிக்காட்டி குற்றத்தடுப்பு பிரிவு பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு 2009ஆம் ஆண்டு மே மாதம் 28ஆம் திகதி முறைப்பாட்டை அனுப்பி வைத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து கொழும்பைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகள் கடத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு கடற்படை தளபதியின் ஆலோசகர் ஒருவரும் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு மற்றுமொரு முறைப்பாடும் செய்திருந்தார்.
இந்த விடயம் சம்பந்தமாக குற்றப்புலனாய்வுப் பிரிவு ஆதாரபூர்வமாக விசாரணைகளை முன்னெடுத்துச் செல்லும்போது இதில் பெரும் பிரச்சினையொன்று உள்ளதை அது உணர்ந்தது.
கடற்படையில் உள்ள சில அதிகாரிகளுக்கு இதில் தொடர்புள்ளதாலும், இவை சாதாரண குற்றச்செயல்கள் இல்லாமையினாலும் இதனை அரசின் இராணுவக் கட்டமைப்புக்குள் செய்யப்பட்ட குற்றங்களாகும் என அது ஊகித்தது.
எனவே இது சம்பந்தமாக விசாரணை முன்னெடுக்கும்போது தேசிய பாதுகாப்பு மற்றும் ஏனைய பாதுகாப்புப் படையினர் தொடர்பாகவும் பிரச்சினைகள் ஏற்படும் என குற்றப்புலனாய்வுப் பிரிவு அனுமானித்தது.
இதனால் இந்த விடயம் சம்பந்தமாக அப்போதைய பாதுகாப்புச் செயலாளரிடம் தாங்கள் அடுத்தகட்டமாக என்ன செய்ய வேண்டும் என ஆலோசனை பெற்றது.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ பூரண விசாரணை நடத்தி ஒரு மாத காலத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஆலோசனை வழங்கியிருந்தார்.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா முன்னாள் கடற்படைத் தளபதிக்கு அனுப்பி வைத்த கடிதத்தில், கொழும்பைச் சேர்ந்த 5 பேர் கடத்தப்பட்டுள்ளனர் எனவும் அவர்களை விடுதலைசெய்ய நடவடிக்கை எடுக்குமாறும் குறித்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
பீலிக்ஸ் பெரேராவும் கடற்படையில் அவர்கள் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் என்று வரும்போது ஒரு தரப்பு இன்னொரு தரப்பை அடக்குவதற்கு முற்படும்போது தவறுகள் இடம்பெறலாம்.
ஆனால் யுத்த சூழலில் யுத்தத்துக்கு எவ்வித சம்பந்தமும் இல்லாத பிள்ளைகளைக் கடத்திக் கப்பம் கோருவது நியாயமானதாக ஏற்றுக்கொள்ள முடியுமா? இது சம்பந்தமான விசாரணை நடத்தாமல் இருக்க முடியுமா? குற்றப்புலனாய்வுப்பிரிவு நேர்மையான விசாரணையை நடத்தி வரும் நிலையில் ஆளும்தரப்பு உறுப்பினர் ஒருவர் (மலிக் ஜயதிலக – தேசியப்பட்டியல் எம்.பி.) பொலிஸ்மா அதிபரைச் சந்தித்து இந்த விசாரணையை நிறுத்துமாறு கோரியுள்ளார்.
அந்த இடத்துக்குக் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்குப் பொறுப்பாகச் செயற்படும் சானி அமரசேகர அழைக்கப்பட்டு விசாரணைகள் தொடர்பில் கேட்டறிந்துள்ளார்.
மீண்டும் அந்தக் குற்றச்செயலை மறைக்க அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளது. பொலிஸ்மா அதிபரின் இந்தச் செயற்பாட்டால் குறித்த அதிகாரிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் நேர்மையான அதிகாரிகளின் வாழ்வுடன் விளையாடாதீர்கள். இது நியாயமானதா? கடந்த ஆட்சியைப் போன்றே தற்போதைய அரசும் ஊழல், மோசடிக்காரர்களைப் பாதுகாக்கும் குழியாக அமைந்துள்ளது’ – என்றார்.