யாழ்ப்பாணத்தில் ஒருமாதகாலமாக புதியதொரு சுவாசம் தொடர்புபட்ட நோய் பரவிவருவதாக யாழ். போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் ஜமுனாநந்தா தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்நோயினால் சராசரியாக நாளொன்றுக்கு 1000 பேர் வரையில் சிகிச்சைக்கு வந்துசெல்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்நோயின் தாக்கம் தொடர்பாகவும்,
அதனை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் தொடர்பாகவும் வைத்தியர் ஜமுனாந்தா தெரிவித்ததாவது,
தற்போது அண்மையான ஒருமாதகாலமாக புதிய ஒரு நோய் பரவிவருகின்றது. இந் நோயானது இன்புளுவன்ஸா வைரஸால் ஏற்படுகின்றது. இதனால் சராசரியாக யாழ். போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் 400 பேர் வரையில் சிகிச்சைக்காக வருகைதரும் நிலையில் தற்போது இவ் எண்ணிக்கை ஆயிரமாக அதிகரித்துள்ளது.
இந்நோயின் தாக்கமானது வித்தியாசமானதாக உள்ளது. குறிப்பாக இந்நோயின்அறிகுறியாக தொடர்ச்சியான காய்ச்சல், உடல் வலி, சளி, தும்மல் காணப்படல் போன்ற அறிகுறிகள் தென்படும். குறிப்பாக இந்நோயின் அறிகுறியும், டெங்கு நோயின் அறிகுறியும் ஒரேமாதிரியாக இருப்பதால் மக்கள் இந்நோயை டெங்கு நோயாக தவறாக நினைக்கும் சந்தர்ப்பங்களும் உண்டு.
ஒருவருக்கு இந்நோய் காணப்படும்போது அவரது தும்மலாலேயே இந்நோய் மற்றையவர்களுக்குதொற்றுகின்றது. அதாவது ஒருவர் மற்றவருக்கு எதிராக தும்மும்போது அவரது தும்மலிலிருந்து மற்றவருக்கு சிந்தும் சளியால் இந்நோய் பரவுகின்றது.
இந் நோயானது குழந்தைகள் மற்றும் வளர்ந்தவர்களில் சலரோக நோயாளர்கள், கர்பவதிகள், அஸ்மா நோயாளிகள், போன்றவர்களை அதிகம் தாக்குகின்றது. இந்நிலையில் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீராகாரம், நீர்சத்து நிறைந்த உணவுகள் கொடுக்கவேண்டியதுடன் வைத்தியசாலைக்கு வருபவர்களுக்கு அவர்களின் நோயின் தாக்க அளவை பொறுத்து சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறான நிலையில் இந்நோயினை தவிர்க்கவேண்டுமாயின் தற்போதைய சூழ்நிலையில் அதிகளவான சனநெருக்கம் நிறைந்த இடத்திற்கு செல்வதை தவிர்க்கவேண்டும். ஏனெனில் சுவாசம்தொடர்பான நோயாததால் அதிகளவான மக்கள் நெரிசலான இடத்தில் இந்நோய் பரவுவது இலகுவானதாக இருக்கும். மேலும் ஒருவர் தும்மும்போது மற்றையவருக்கு எதிரே தும்மாது இருக்கவேண்டும். இந்நோயின் கிருமியானது ஒரு கிலோமீற்றர் வரை தொற்றிக்கொள்ளும் தன்மையுடையது.
அத்துடன் ஒருவர் தும்மும்போது பிரத்தியேகமான கைக்குட்டையைப் பயன்படுத்துவதோடு, சளியைத் துடைக்கப் பயன்படுத்தும் துண்டுகளை பாவித்தபின்னர் தீயிலிட்டுக் கொழுத்தவேண்டும். இதேபோன்று கைகளை நன்கு சுத்தமான நீரில் சவர்க்காரம் போட்டுக் கழுவியபின்னரே எந்த வேலையையும் செய்யவேண்டும். இவற்றினூடாகவே இந்நோயின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும். இவற்றைவிட இந்நோய்தொடர்பான அறிகுறிகள் காணப்படுமாயின் அருகிலுள்ள வைத்தியசாலைக்குச் சென்று வைத்தியரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளவேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.