கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வைத்து 2009 ஆம் ஆண்டு வெள்ளை வானில் கடத்தப்பட்ட 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றில் குற்றப்புலனாய்வு பிரிவு அறிவித்துள்ளது.
குறித்த வழக்கு ஒரு மாதத்திற்கு பின்னர் நேற்று (திங்கட்கிழமை) கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே குற்றப்புலனாய்வு பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரண்ணாகொட, தனது பாதுகாப்பு உத்தியோகத்தராக இருந்த லெப்டினண்ட் கொமாண்டர் சம்பத் முனசிங்கவிற்கு எதிராக குற்றத்தடுப்பு பிரிவில் செய்த முறைப்பாட்டை அடுத்து, குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட விசாரணையிலேயே இந்த விடயம் வெளியாகியுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள கொமாண்டர் சுமித் ரணசிங்க மற்றும் முக்கிய சாட்சியாளர்களில் ஒருவரான கடற்படை தளபதி வெகதெர ஆகியோரின் வாக்குமூலங்கள் ஊடாக இந்த தகவல் வெளிப்படுத்தப்பட்டதாக குற்றப்புலனாய்வு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.