யாழ். மாநகர சபையின் உரிய அங்கீகாரம் இல்லாமல் இவ்வருட முற்பகுதியில் 60 இலட்சம் ரூபாவிற்கு ஆளும் ஈ.பி.டி.பி கட்சியினர் தமது எண்ணப்படி வேலைகளைச் செய்து முடித்துவிட்டு, பின்பு மூடு அங்கீகாரம் பெற்றுள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாநகரசபை உறுப்பினர் கே.என்.விந்தன் கனகரத்தினம் தெரிவித்துள்ளார்.
யாழ. மாநகரசபையின் எட்டாவது மாதாந்தக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ். மாநகரசபையின் இவ்வாண்டிற்கான கூட்டங்கள் எட்டு நடைபெற்று முடிந்துள்ளன. எதிர்க்கட்சி உறுப்பினர்களான நாமும் மாநகர அபிவிருத்தி மற்றும் மக்கள் தொடர்பான பிரேரணைகளைக் கடந்த ஆண்டுகளிலும் நடப்பு ஆண்டிலும் சமர்ப்பித்துள்ளோம்.
அவை யாவும் நிலையியல் குழுக்களிலும் மாதாந்தக் கூட்டங்களிலும் உரிய முறையில் அங்கீகரிக்கப்பட்டிருந்தும் அவற்றில் எழுபத்தைந்து வீதமான பிரேரணைகள் நடைமுறைப் படுத்தப்படாமல் காலந்தாழ்த்தி திட்டமிட்டு இழுத்தடிக்கப்பட்டுள்ளது.
ஏன் இந்தப் பாரபட்சம் இங்கே நடைபெறுகின்றது? உறுப்பினர்களுக்கான வருடாந்த நிதி வருடமொன்றுக்கு ஐந்து இலட்சம் என ஒதுக்கீட்டு முறைப் பிரேரணை இரு முறை நான் சபையில் கொண்டு வந்து நிறைவேற்றபட்டும் அது உரியமுறையில் நடைமுறைப்படுத்தப் படுவதில்லை.
உள்ளூராட்சி முறைமை என்பது எதிர்க்கட்சியினரையும் அபிவிருத்தியில் பங்கு கொள்ள வைப்பதும் அவர்களில் நியாயமான கோரிக்கைகள், கருத்துக்கள், உரிமைகள் போன்றவற்றுக்கு மதிப்பளித்து செயற்படுத்தல் வேண்டும் என்பதேயாகும். அபிவிருத்தியில் எமக்கும் பங்கு வேண்டும்.
அதைப் பெற்று மக்கள் மத்தியில் கொண்டு செல்ல எமக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படல் வேண்டும். அண்மையில் நடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தீவகம் தவிர்ந்த அனைத்து சபைகளையும் வடக்கில் கூட்டமைப்புக் கைப்பற்றியுள்ளது.
அதில் வெற்றி பெற்ற கூட்டமைப்புசார் தவிசாளர்கள், உபதவிசாளர்கள், உறுப்பினர்கள் ஆகியோருக்கு எமது தலைமையும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பணித்துள்ளனர்.
உங்கள் சபைகளிலே உள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் அரவணைத்து அபிவிருத்தியில் பங்கு பெறச் செய்து அவர்களின் நியாயமான எண்ணங்கள் அபிலாசைகளுக்கு மதிப்பளித்துச் செயற்படுங்கள்.
உங்களைப் போல் அவர்களையும் நேசித்து வழிநடத்துங்கள் என்றார்கள். இது நாகரிகம், அரசியல் பண்பு. ஆனால் உங்கள் தலைமையும் பொறுப்பாளர்களும் எமது கோரிக்கைகளை நிராகரிக்க வேண்டுமென போதித்தார்களோ என்ற சந்தேகமும் எம்மத்தியில் இப்போது வலுத்து நிற்கின்றது.
உங்களுக்குத் தெரியும் கிளிநொச்சி மாவட்டம் எவ்வளவு யுத்த அவலத்தைக் கடந்து முப்பது வருடங்களாக சந்தித்துப் பின்தங்கிய பிரதேசம் என்று அந்த மாவட்டத்தின் கரைச்சிப் பிரதேசசபை கூட்டமைப்பைப் பெரும்பான்மையாகக் கொண்டது. அந்த சபையிலே உங்கள் கட்சி சார்ந்த நான்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இருக்கின்றனர்.
அவர்களுக்கும் அபிவிருத்திக்கான நிதியாக தலா ரூபா பன்னிரண்டு இலட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது பத்திரிகைகளில் கூட செய்தி பிரசுரமாகி இருக்கின்றது. வடக்கு கிழக்கிலே கூட்டமைப்பு வெற்றி பெற்ற ஏனைய சபைகளிலும் இதே நிலைப்பாட்டை அவர்கள் பின்பற்றியே தீருவார்கள். அதில் சந்தேகமில்லை.
நாம் அபிவிருத்தியில் பங்கு கேட்கும் போதெல்லாம் சபையில் பணம் இல்லை என்று கூறிகிறீர்கள். இச்சபையிலே நான் ஒரு நிதிக்குழு உறுப்பினராகவும் இருக்கின்றேன். எனக்கு சபையின் நாளாந்த வருமானம், மாதாந்த வருமானம், வருடாந்த வருமானம் எத்தனை கோடி என்பது தெரியும். அதன் செலவீன விபரங்களும் தெரியும்.
ஆளும் கட்சியினரும் முதல்வரும் எவ்வளவு வேலைத் திட்டங்களைச் செய்திருக்கிறீர்கள் என்பதும் எமக்குத் தெரியும். அதை நாம் எதிர்க்கவில்லை. ஆனால் நாம் உங்களிடம் கேட்பது அபிவிருத்தியில் எமக்குக் கிடைக்க வேண்டிய உரிமையைத் தான். மாறாகப் பிச்சையை அல்ல.
இதை நீங்கள் உணர்ந்து எமது நியாயமான கோரிக்கைகளை ஏற்று நடைமுறைப்படுத்த வேண்டும். அபிவிருத்தியில் எமக்குப் பங்குதர முடியாதென்றால் நேரடியாகவே சொல்லுங்கள். நாம் எதிர்ப்பு அரசியல் நடாத்த எம்மிடம் எவ்வளவோ விவகாரங்கள் கைவசம் உள்ளன.
அதை நாம் முறையாக முன்னெடுத்துச் செல்வோம். நாம் இச்சபைக்கு வந்தது இணக்க அரசியல் நடாத்தவோ சரணாகதி அரசியல் நடாத்தவோ இல்லை. அபிவிருத்திக்காக நாம் உங்கள் வீட்டுப் பணத்திலிருந்தோ அல்லது உங்கள் கட்சிப் பணத்திலிருந்தோ கேட்கவில்லை.
அபிவிருத்திகளை எமது வீடுகளுக்குக் கொண்டு செல்லவும் கேட்கவில்லை. மக்களுடைய வரிப்பணத்திலிருந்து அவர்களுக்கே அபிவிருத்தியை முன்னெடுப்பதற்காகத்தான் பங்கு கேட்கின்றோம் என்றார்.