யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்களின் காணிகளை ஒரு மாதகாலத்திற்குள் விடுவிக்குமாறு காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையின் தொழிற்சங்க தலைவரும் யாழ்பாண பிரஜைகள் குழுவின் தலைவருமான விஜயரட்ணம் ரெட்ணராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.
வலிகாமம் வடக்கு பகுதி மக்கள் காணிகளை விடுவிக்குமாறு கோரி சத்தியாக்கிர போராட்டங்களை முன்னெடுப்பதற்கு முன்னர் அவற்றை விடுவிக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
காங்கேசன்துறை, மயிலிட்டி, பலாலி, ஊரணி, தையிட்டி பகுதி மக்களின் ஒரு சில பகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ள போதிலும் எஞ்சிய பகுதிகள் இதுவரை விடுவிக்கப்படவில்லை.
இந்நிலையில் யாழ்ப்பாண ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையின் தொழிற்சங்க தலைவரும் யாழ்பாண பிரஜைகள் குழுவின் தலைவருமான விஜயரட்ணம் ரெட்ணராஜா, ஐந்து கிராம மக்களுக்கும் நஷ்ட ஈடு வழங்கி அரசாங்கம் அவர்களின் காணிகளில் மீள்குடியேற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வலிகாமம் வடக்கு இடம்பெயர்ந்தோர் அமைப்பின் உறுப்பினர் கந்தையா பாலசுப்ரமணியம் 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வடக்கில் எவ்வாறு இராணுவத்தினர் நிலைகொண்டிருந்தார்களோ அதேபோன்று மக்களின் அன்றாட வாழ்க்க்கைகு இடையூறு இன்றி இராணுவம் செயற்படவேண்டும் என கேட்டுக்கொண்டார்.