இந்தோனேசியாவில் அகதி அந்தஸ்து வழங்குமாறு கோரி ஈழ தமிழர்கள் மேற்கொண்ட உணவு தவிர்ப்பு போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.
ஈழ அகதிகளின் கோரிக்கை தொடர்பில் ஆராய்ந்து விரைவில் தீர்வினை பெற்றுத்தருவதாக சர்வதேச அகதிகள் நிறுவன அதிகாரிகள் வழங்கிய உத்தரவாதத்தினை தொடர்ந்து உணவு தவிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் அகதி அந்தஸ்து மறுக்கப்பட்ட ஈழ அகதிகள் தம்மை வேறு நாடுகளில் குடியேற்றுமாறு கோரி கடந்த ஐந்து நாட்களாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவ்வாறு உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் உடல் நிலை மோசமடைந்த நிலையில் ஐவர் மொடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையிலேயே சர்வதேச அகதிகள் நிறுவன அதிகாரிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை நேற்றைய தினம் நேரில் சென்று கலந்துரையாடியதுடன் விரைவில் தீர்வினை பெற்றுத்தருவதாக தெரிவித்துள்ளனர்.
அத்துடன் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தேனீர் கொடுத்து அவர்களின் போராட்டத்தினையும் தற்காலிகமாக முடிவிற்கு கொண்டு வந்துள்ளனர்.
இதேவேளை, இந்தோனேசியாவில் புகலிடம் கோரிய நிலையில் அகதி அந்தஸ்து வழங்கப்பட்ட பல ஈழத்தமிழர்கள் தொடர்ந்தும் மொடன் பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தம்மை விடுதலை செய்யுமாறும் இந்தோனேசிய அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்தோனேசியாவின் மொடான் பகுதியில் யாழ்ப்பாணம் திருகோணமலை மட்டக்களப்பு மற்றும் வன்னி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 350 ஈழத்தமிழர்கள் குடும்பங்களாகவும் தனி நபர்களாகவும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.