இலங்கையின் பொதுப்போக்குவரத்தில் 90 வீதமான பெண்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். இதனை கட்டுப்படுத்துவதற்கென சிறுவர் விவகார அமைச்சு, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு, பிரதமர் அலுவலகம் மற்றும் இலங்கை பொலிஸ் என்பவற்றுடன் இணைந்து UNFPA அமைப்பு “அவளின் பயணம் பாதுகாப்பானதா?” என்ற தொனிப்பொருளிலான பொதுமக்களை அறிவூட்டும் ஒரு பிரசார நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது என இலங்கையின் ஐக்கிய நாடுகள் சனத்தொகைக்கான நிதியம் அறிவித்துள்ளது.
நிதியம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது பாலியல் துன்புறுத்தலானது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதுடன் பெண்களையும் சிறுமிகளையும் உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பாகுபாட்டுக்கு உட்படுத்தும் ஒரு கலாசாரத்துக்கும் வழிவகுக்கிறது. இது உலகளாவிய ரீதியில் பெண்கள் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினையாக உள்ளது.
ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தினால் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, இலங்கை பொதுப்போக்குவரத்து பஸ் வண்டிகள் மற்றும் புகையிரதங்களில் பயணிக்கும் 90 சதவீத பெண்களும் சிறுமிகளும் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களில் 4 சதவீத மானோர் மாத்திரமே பொலிஸாரிடம் உதவி வேண்டியுள்ளதை இந்த ஆய்வு வெளிக்காட்டி நிற்கின்றது. 2015 இல் UNFPA அமைப்பானது இலங்கையின் ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கும் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் 15 – 35 க்கு உட்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகளிலிருந்தான 2,500 மாதிரியெடுப்புக்களை அடிப்படையாகக் கொண்டு இந்த தேசிய ஆய்வை முன்னெடுத்தது. பங்காளர் கலந்துரையாடல், பிரதான தகவலாளர், நேர்காணல்கள் மற்றும் வினாக்கொத்து ஆய்வுகள் ஊடாக தரவுகள் சேகரிக்கப்பட்டன.
தேசிய முன்னுரிமையின் அடிப்படையில் இந்தப்பிரச்சினையை எதிர்கொள்வதில் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு, பிரதமர் அலுவலகம் மற்றும் இலங்கைப் பொலிஸ் என்பவற்றுடன் இணைந்து UNFPA அமைப்பு “அவளின் பயணம் பாதுகாப்பானதா?” என்ற தொனிப்பொருளிலான பொதுமக்களை அறிவூட்டும் ஒரு பிரசார நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. பிரசார நடவடிக்கையை ஆரம்பிக்கும் முகமாக UNFPA கொழும்பில் ஒரு ஊடக மாநாட்டை நடத்தியது.
இதில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி அசோகா அளவத்த, க்ராஸ்ரூட்டட் ட்ரஸ்ட் இலிருந்து திருமதி பபா தேசப்பிரிய, இலங்கை பொலிஸாரின் சிறுவர் மற்றும் இளைஞர் மற்றும் பெண்கள் அமைப்பின் தலைவர் எல். ஆர்.அமரசேன, ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஊனா மொக்காலே உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஊடக மாநாட்டில் பொதுப் போக்குவரத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் வன்முறைகள் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் அதற்கான கொள்கைப்பரிந்துரைகள் உள்ளிட்ட முன்மொழிவுகளுடனான கொள்கைச் சுருக்கத்தை UNFPA வெளியிட்டுவைத்தது. UNFPA நிகழ்ச்சித்திட்ட பகுப்பாய்வாளர் திருமதி ஷாரிகா குரே ஆய்வின் பெறுபேறுகளைப் பற்றியதொரு விளக்கத்தை முன்வைத்தார். மூன்று வகையான தனி நபர்கள் சாதகமான மாற்றத்துக்கு துணையாக இருக்க முடியும் என இந்த முன்வைப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. அதில், பாதிப்புக்கு உட்பட்டவர் – விடயத்தை எடுத்துக்கூறல் மற்றும் நடவடிக்கை எடுத்தல், பக்கத்தில் இருப்பவர் – தலையிடுதல் மற்றும் உதவி வழங்கல், தவறிழைத்தவர் – அவ்வாறான எவ்வித வன்முறைகளையும் செய்யாதிருத்தல்.
இந்த சமூகப் பிரச்சினைக்கான தீர்வை காண்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், UNFPA பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள திருமதி ரிட்சு நக்கேன் “பொதுப் போக்குவரத்தில் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறையானது பால் நிலை அடிப்படையிலான வன்முறையின் ஒரு வடிவமாகும்.
பால்நிலை அடிப்படையிலான வன்முறைப் பிரச்சினையை பரந்த மட்டத்தில் எதிர்கொள்வதற்கு சான்றுகளை அடிப்படையாகக் கொண்ட கொள்கை வகுப்புக்கான தரவுகளை நாம் நாடளாவிய ரீதியில் சேகரிக்க வேண்டும். இந்த ஆய்வானது இலங்கையில் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகள் பற்றிய தரவு சேகரிப்பதற்கானதொரு முதல் படியாகும்” எனக் குறிப்பிட்டார்.
UNFPAயினால் முன்னெடுக்கப்பட்ட இந்தப் பிரசார நடவடிக்கையானது மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் 2017 மார்ச் மாத சர்வதேச மகளிர் தின நினைவு தின கொண்டாட்டத்தின் ஒரு அங்கமாகும்.