முன்னாள் பிரதி பாதுகாப்பு அமைச்சரான காலம் சென்ற அநுருத்த ரத்வத்தையின் வங்கி பாதுகாப்பு பெட்டகத்தலிருந்து இரகசியப் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட எட்டுக் கோடி ரூபாவையும் குறித்த தனியார் வங்கியிடமே ஒப்படைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிமன்ற நீதியரசர் சுனில் ராஜபக்ச நேற்று உத்தரவிட்டுள்ளார்.
இந்தப் பணம் மற்றும் இதனுடன் இருந்த பல நிலம் தொடர்பான ஆவணங்கள் ரத்வத்தைக்கு சொந்தமானது அல்ல. அதாவது கறுப்பு பணம் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆவனங்களைப் பார்க்கும் போது அவை யாழ். குடாநாட்டு மக்களிற்கு சொந்தமானவை என அறியமுடிகின்றது.
ஆகவே ஒட்டுமொத்த பணத்தினையும், ஆவணங்களையும் உரிய வங்கியிடமே திருப்பி கொடுக்குமாறு நீதிமன்றம் இரகசியப் பொலிசாருக்கு பணித்துள்ளது.
காலஞ் சென்ற அநுருத்த ரத்வத்தையின் இரு புதல்வர்களான லோஹான் ரத்வத்தை, மஹேந்திர ரத்வத்தை ஆகியோர் இந்தப் பணத்தை தம்மிடமே ஒப்படைக்க வேண்டும் என்று தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்று இடம்பெற்ற போதே மேற்கண்டவாறு தீர்ப்பு வழங்கப்பட்டது.
யாழ்ப்பாணத்தை தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து அரச கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக இவரால் முன்னெடுக்கப்ட்ட இராணுவ நடவடிக்கையின் போது, தமிழ் மக்கள் தரப்பில் உயிரிழப்புகளும் உடைமை இழப்புகளும் ஏற்பட்டமை தெரிந்ததே.
அத்துடன் பொதுத் தேர்தல் காலத்தின் போது மடவளையில் ஏழு முஸ்லிம் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியும் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்தக் குற்றச்செயல்கள் நிரூபிக்கப்பட்டிருந்த போதும் மஹிந்த அரசு நடவடிக்கை எடுக்காமல் அவரை தம் வசம் வைத்திருந்து பாதுகாப்பு வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.