வடமாகாண சபை இளைஞர் யுவதிகளிற்கான வேலைவாய்ப்பை உருவாக்க கூடிய எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.எந்த ஒரு தொழில்சாலைகளும் உருவாக்கப்படவில்லை வடக்கை நோக்கி வந்த தொழில்சாலைகளையும் என்ன காரணங்களை காட்டி திருப்ப முடியுமோ அவ்வாறான காரணங்களை காட்டி திருப்பியதுதான் மாகாண சபையின் சாதனை. என வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் ச.சுகிர்தன் பகிரங்க குற்றசாட்டை முன் வைத்துள்ளார்.
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக தொடர்ந்து நான்கு நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு தனது ஆதரவை தெரிவித்து, ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டு உள்ளது.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது ,
யாழ்ப்பாண கச்சேரிக்கு முன்னால் வடக்கின் வேலையில்லா பட்ட தாரிகள் பாரிய கவனயீர்ப்பு போராட்டத்தை தொடர்சியாக 4வது நாளாக மேற்கொண்டு வருகிறார்கள்.
அவர்களது போராட்டம் நியாயமானது, இப் போராட்டத்தின் நியாய தன்மையை அரசியல்வாதிகள் கருத்தில் எடுக்கவேண்டும். மாகாணசபையும் மத்திய அரசும் அவர்களது கோரிக்கைக்கு சாதகமான பதிலை வழங்கவேண்டும்.
இவர்கள் கடந்த வருடம் பாரிய போரட்டத்தை செய்த போது வடக்கு மாகாண சபையானது அப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்து அத்துடன் பல வாக்குறுதிகளையும் வழங்கினார்கள் ஆனால் கல்வி அமைச்சை தவிர ஏனைய நான்கு அமைச்சுகளும் இவர்களது வேலைவாய்பில் அக்கறை செலுத்தியதாக தெரியவில்லை.
உண்மையில் இவர்கள் ஏதாவது நடவடிக்கை எடுத்து இருந்தால் அதன் முன்னேற்றத்தினை போராட்டத்தில் ஈடுபடும் பட்டதாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். மாகாணசபை உருவாக்கப்பட்டு 3வருடங்கள் முடிவடைந்த நிலையில் வடக்கு மாகாண இளைஞர் யுவதிகளிற்கான வேலைவாய்ப்பை உருவாக்க கூடிய எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என்ற பகிரங்க குற்ற சாட்டை முன்வைகிறேன்.
எந்த ஒரு தொழில்சாலைகளும் உருவாக்கப்படவில்லை வடக்கை நோக்கி வந்த தொழில்சாலைகளையும் என்ன காரணங்களை காட்டி திருப்ப முடியுமோ அவ்வாறான காரணங்களை காட்டி திருப்பியதுதான் மாகாண சபையின் சாதனை.
மாகாண சபை அமைச்சர்கள் உடனடியாக இருகிற வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் அதற்கு மத்திய அரசு தடையாக இருந்தால் அதை பகிரங்கப்படுத்தி விட்டு பட்டதாரிகளுடன் போராட தயாராக வேண்டும். 2015 அவர்களிற்கு நான் வழங்கிய வாக்குறுதிகளின் அடிப்டையில் மாணவர்களின் கோரிக்கை நிறைவேறும் வரை எனது பூரண அதரவினை தெரிவித்து கொள்கின்றேன். என மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.