கைதடி மத்திய மருந்தகம் அமைந்துள்ள இடத்தில் வடமாகாண சபையின் தலைமையகம் அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதால் அந்த பராமரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு தற்காலிகமாக இடம் மாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.ஏ9 வீதியில் யாழ்ப்பாணம் மற்றும் சாவகச்சேரி ஆகிய நகரங்களில் இருந்து அண்ணளவாக 10 கிலோ மீற்றர் தூரத்தில் ஒரு மையப்பகுதியில் இக்கைதடி ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையம் அமைந்துள்ளது.
சமூகத்தில் விசேட தேவையுடையவர்கள் நிறைந்து வாழும் இப்பிரதேசத்தில் இவ்வைத்தியசாலை (ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையம்) அமைந்துள்ளமையால் அதன் அமைவிடமும், இருப்பும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்தப் பராமரிப்பு நிலையத்தின் சேவை கைதடி முதியோர் இல்லத்தில் உள்ள வயோதிபர்கள், நவீல்ட் விழிப்புலனற்றோர் பாடசாலையில் உள்ள விசேட தேவையுடையவர்கள், பெற்றோர்களால் கைவிடப்பட்ட குழந்தைகளின் காப்பகமான இரட்சண்யசேனை இல்லக் குழந்தைகள் என பரந்துள்ளது.
மேலும் விழிப்புலனற்றோருக்கான தொழிற்பூங்கா, யாழ். பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பீட விடுதி எனப் பலர் இப்பிரதேச மருத்துவமனையை நம்பி வாழ்கின்றனர்.
அத்துடன் வட மாகாண ஆயுர்வேத சிகிச்சை நிலையத்தில் இருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக ஆங்கில மருத்துவமனைகளை நாடும் நோயாளிகள், அங்கு அமைந்துள்ள ஒன்பது அமைச்சுக்களுக்குரிய அலுவலர்கள் மற்றும் இப்பிரதேச மக்கள் என வைத்தியசாலையின் தேவை அதிகரித்த நிலையில் உள்ளது. ஆகவே கைதடி வயோதிபர் இல்லத்துக்கு அருகில் உள்ள கைதடி ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையத்தின் தேவை மிகவும் இன்றியமையாதது.
கைதடி வயோதிபர் இல்லத்துக்கு நிரந்தரமான வைத்தியர் மற்றும் பயிற்றப்பட்ட தாதி இல்லாமையால் அங்குள்ளவர்கள் பலத்த சிரமத்தை எதிர்நோக்குவதுடன் இவ்வைத்தியசாலையில் நாளாந்தம் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. இவ்வைத்தியசாலை குறிப்பிட்ட இடத்தில் 1952 ஆம் ஆண்டு தொடக்கம் இயங்கி வருவதுடன், தற்போது அங்கு டாக்டர் அருள்நேசன் கடமையாற்றி வருகிறார்.
ஆகவே வடமாகாண சபை மற்றும் சுகாதார திணைக்களம் ஆகியவை இணைந்து வடமாகாண சபையின் தலைமையகத்தை அமைப்பதற்காக தேர்ந்தெடுத்திருக்கும் இவ்வைத்தியசாலை அமைந்துள்ள இடத்துக்கு மாற்றீடான இடத்தை வழங்கி அவ்வைத்தியசாலையைத் தரமுயர்த்துவதுடன், தொடர்ந்து இயங்கச் செய்ய வேண்டும் என அப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.