வடக்கு மாகாணத்தின் தலைநகரமாக மாங்குளத்தை அபிவிருத்தி செய்வதற்காக ஏ- 9 வீதியின் இரு மருங்கிலும் 31ஆயிரம் ஏக்கர் காணி இனங்காணப்பட்டுள்ளதாக மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) 23 கீழ் 2 இல் சிறப்புக்கட்டளைக்கு அமைய எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் இது தொடர்பில் மேலும்,
‘வடக்கு மாகாணத்தின் தலைநகரமாக மாங்குளம் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் அதனை அபிவிருத்தி செய்வது தொடர்பில் பல தரப்புகளுடனும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்ட வருகின்றன. அத்துடன் வட மாகாணம் தொடர்பில் செயல் நுணுக்க ஆய்வும் செய்யப்பட்டுள்ளது.
அது மட்டுமின்றி வனம், சுற்றாடல், நீர் வளம், சுற்றுலா உள்ளிட்ட 5 அடிப்படைகளின் கீழ் ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. இதனடிப்படையிலேயே அபிவிருத்தி நடைபெறும்.
இதேவேளை, மாங்குளத்தை தலைநகரமாக அபிவிருத்தி செய்ய ஏ – 9 வீதியின் இரு மருங்கிலும் 31ஆயிரம் ஏக்கர் காணி இனங்காணப்பட்டுள்ளது. இதில் 1400 ஏக்கர் காணி காடு சார்ந்தது. வனம் மற்றும் நீர் நிலையங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் சுற்றாடல் தொடர்பான நடைமுறைகள் இறுக்கமாகக் கடைபிடிக்கப்படும்.
குறிப்பாக, கனகராயங்குளம் ஆற்றுக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாது. அத்துடன், அபிவிருத்தி இனங்காணப்பட்டுள்ள இடங்களை காட்டு யானைகள் வழித்தடங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டாலும் அவ்வாறு எதுவும் இல்லையென்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. திட்டத்தை தயாரிப்பது எமது கடமை. அதனை நடைமுறைப்படுத்த முன்னர் இது குறித்து சகல தரப்பினதும் ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்படும்’ என்றார்.