யாழ் குடாநாட்டில் கடந்த ஜனவரி மாதம் வரையில் பெருமளவு இறால் பிடிக்கப்பட்டுள்ளது.
20 வகையிலான மீனினங்கள் பிடிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
2017ஜனவரி மாதம் வரை யாழ் குடாநாட்டு கடற்பரப்பில் மொத்தமாக 578,910 கிலோகிராம் இறால் பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ் மாவட்ட நீரியல் வள திணைக்கள புள்ளிவிபரவியலில் இருந்து இந்த தகவல்கள் தெரியவந்திருப்பதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
யாழ் குடாநாட்டில் தாளையடி, பருத்தித்துறை மேற்கு, கிழக்கு, காங்கேசன்துறை மேற்கு, கிழக்கு சண்டிலிப்பாய், சுழிபுரம், ஊர்காவற்துறை, நெடுந்தீவு, வேலணை, யாழ்ப்பாணம் கிழக்கு, மேற்கு, சாவகச்சேரி, ஆகிய 14 மீன்பிடி பிரதேசங்களில் இவை பிடிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை இவற்றில் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படும் பொருளாக சிவப்பு இறாலுக்கு யாழ் சந்தையில் நல்ல விலை கிடைத்துவருகின்றது.
சிவப்பு இறால் ஒரு கிலோ ரூபா 600 தொடக்கம் ரூபா 700 வரை விற்பனை செய்யப்படுகின்றது. ஏற்றுமதி செய்யப்படும் இவ்வகை இறாலுக்கு ரூபா 800 தொடக்கம் ரூபா 900 வரை பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இந்திய மீனவர்களின் அத்துமீறல் மீன்பிடி நடவடிக்கைகள் தற்போது குறைந்துள்ளது.
யாழ்மாவட்ட நீரியல் வளத்திணைக்களம் இதுதொடர்பாக தெரிவிக்கையில் 2016ம் ஆண்டு 140 இந்திய மீனவர்கள் மாத்திரமே இலங்கை கடற்படையினரால் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் காரணமாக கைதுசெய்யப்பட்டனர். இவர்களோடு 29 மீன்பிடி வள்ளங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
2013ம் ஆண்டு 48 இந்திய படகுகளும் 220 மீனவர்களும்,2014ம் ஆண்டு 100 படகுகளும், 477 மீனவர்களும், 2015 ஆம் ஆண்டு 43 படகுகளும், 273 மீனவர்களும், இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடித்தமைக்காக கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
2017 ஆம் ஆண்டு இதுவரையில் 4 படகுகளும் 21 மீனவர்களும் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.