வடமாகாணசபைக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒருபோதும் திரும்பி அனுப்பி வைக்கப்படவில்லையென வட மாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
வடமாகணசபையின் 85 ஆவது அமர்வு இன்று வடமாகாண சபையின் பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது மாகாணசபை உறுப்பினர்களான எம்.கே. சிவாஜிலிங்கம், தியாகராஜா ஆகியோர் மாகாணசபைக்கு ஒதுக்கப்பட்ட நிதி திரும்பி செல்வதாக குற்றச்சாட்டுக்கள் வெளியாகும் நிலையில் அதன் உண்மை தன்மை என்னவென்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த வட மாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம், எந்தவொரு பணமும் திரும்பி போவதில்லை. திரும்பி போகவுமில்லை. மத்திய அரசாங்கம் நிதியை விடுவிக்கவில்லை. காரணம் வேலைகளை நாங்கள் முடிக்கவில்லை.
இந்த விடயங்களை விமர்சிக்கும் எவருக்கும் புரியவில்லை. ஊடகங்களுக்கும் தெரியவில்லை எனத் தெரிவித்தார்.
இதே வேளை வடமாகாண மீன்பிடி அமைச்சர் டெனீஸ்வரன், தன்னுடைய அமைச்சில் இருந்து நிதி திரும்பவில்லை எனவும் எந்த அமைச்சில் இருந்து எவ்வளவு நிதி திருப்பியுள்ளது? என்பதை அறிவிக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.