படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறு முல்லைத்தீவில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக மக்கள் தொடர் சத்தியாக்கிரகம் மற்றும் சுழற்சிமுறையிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்றைய தினம் கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்களும் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர்.
தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி, பரவிப்பாஞ்சான் ராணுவ முகாமுக்கு முன்னால் இன்று (திங்கட்கிழமை) காலை முதல் மக்கள் இப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராணுவ முகாம் அமைந்துள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு மக்கள் நடத்திய தொடர் போராட்டத்தின் காரணமாக கடந்த காலங்களில் சிறிது சிறிதாக இப் பிரதேசத்தின் காணிகள் விடுவிக்கப்பட்டிருந்தன. எனினும், இன்னும் 27 பேருக்குச் சொந்தமான 9 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படாமல் உள்ளது.
கடந்த வருடம் ஆகஸ்ட் மாதமளவில் இடம்பெற்ற போராட்டத்தின்போது எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் ராஜாங்க அமைச்சர் விஜயகலா ஆகியோர் குறித்த காணி விடுவிப்பு தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருந்தனர். எனினும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில், தமக்கான தீர்வு கிடைக்கும்வரை தாமும் தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக பரவிப்பாஞ்சான் மக்கள் தெரிவித்துள்ளனர்.