வாகனங்களுக்கான அபராதத் தொகையை 50,000 வரை அதிகரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது

போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களுக்கான அபராதத் தொகையை 25,000 முதல் 50,000 வரை அதிகரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து தொழிற்சங்கம் தெரிவித்தது.

கடந்த வருடத்தின் டிசம்பர் 03 ஆம் திகதி ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய வாகனங்களுக்கான அபராதத்
தொகையை விதிப்பது தொடர்பான பிரச்சினையை விசாரிப்பதற்கு விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டது.

நிதி, போக்குவரத்து, சட்டம் ஆகிய அமைச்சுக்களின் செயலாளர்கள், மோட்டார் திணைக்களம், பொலிஸார் ஆகியோர் இந்தக் குழுவில் அடங்குகின்றனர்.

இந்தக் குழுவின் ஆரம்ப அறிக்கை தற்போது தயாரிக்கப்பட்டுள்ளது.

சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனங்களை செலுத்துவோருக்கு முதல் சந்தர்ப்பத்தில் அறவிடப்படும் தொகையான 3000 – 6000 ரூபாவை 30,000 ஆக அதிகரிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது சந்தர்ப்பத்தில் கைது செய்யப்படும் போது 50,000 ரூபா அபராதம் விதிப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாதவர்களை சேவையில் ஈடுபடுத்தியமைக்காக விதிக்கப்படும் 12,000 ரூபா அபராதத் தொகையை 50,000 ரூபா வரை உயர்த்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மது பாவனையில் வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு அறவிடப்படும் 7500 ரூபா தொகையை 30,000 ரூபாவாக அதிகரிப்பதற்கும் இந்த அறிக்கையில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மூன்று மாதங்களை விட அதிகரிக்காத சிறைத்தண்டனை, ஒரு வருடத்திற்கு அனுமதிப் பத்திரத்தை இரத்து செய்தல் என்பனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மது போதையுடன் வாகனம் செலுத்தி விபத்து ஏற்பட்டு ஒருவர் உயிரிழக்கும் பட்சத்தில் இரண்டு முதல் 10 வருடங்கள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படுவதுடன், சாரதி அனுமதிப் பத்திரத்தை இரத்து செய்து ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா அபராதத்தை விதிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வாகன விபத்தில் காயமேற்பட்டால் 15,000 ரூபா வரை அபராதத்தை விதிப்பதற்கு ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இந்த அபராதத் தொகையை 50,000 ரூபாவிலிருந்து ஒரு இலட்சம் வரை அதிகரிப்பதற்கும் குழுவினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சிறு காயங்களுக்கு 50,000 ரூபா அபராதம் விதிக்கப்படவுள்ளது.

ரயில் கடவை சமிக்ஞையை அவதானிக்காது கடக்க முற்படுவோருக்கு புதிதாக அபராதம் விதிப்பதற்கும் குறித்த குழுவினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ரயில் கடவையைக் கடக்கும் முதல் சந்தர்ப்பத்தில் 30,000 ரூபாவாகவும் இரண்டாவது சந்தர்ப்பத்தில் 40,000 ரூபாவாகவும் மூன்றாவது சந்தர்ப்பத்தில் 50,000 ரூபாவாகவும் அபராதம் விதிக்கப்படவுள்ளதுடன், ஒரு வருடத்திற்கு சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்படவுள்ளது.

காப்புறுதி இன்றி வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு விதிக்கப்படும் 25,000 ரூபா அபராதத் தொகை 50,000 ஆக அதிகரிக்கப்படவுள்ளது.

அதிவேகத்தில் பயணிக்கும் வாகனங்களுக்கு வேக அதிகரிப்புக்கு ஏற்ப விதிக்கப்படும் அபராதத் தொகையான 3000 ரூபா 5000 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.

Related Posts