38 வகை கண் வில்லைகளின் விலைகள் குறைப்பு; புகையிலை நிறுவனங்களுக்கு எச்சரிக்கை!

மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காக 38 வகையான கண் வில்லைகளின் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

கண் வில்லைகளின் விலைகள் குறைக்கப்பட்டிருப்பதனால் கண் சத்திர சிகிச்சைக்கான விலைகளும் பெருமளவில் குறைவடைவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சுகாதார அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், கண் வில்லைகளின் புதிய மற்றும் பழைய விலைகள் வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

மக்களின் பயன் கருதி ஏனைய மருந்துகள், மருந்து உபகரணங்கள், தனியார் வைத்தியசாலைகளின் கட்டணங்கள் மற்றும் தனியார் துறையில் முன்னெடுக்கப்படும் அனைத்து வைத்திய பரிசோதனைகளினதும் விலைகளை கட்டுப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் வெகு விரைவில் முன்னெடுக்கப்படுமெனவும் அவர் வலியுறுத்தினார்.

சுகாதாரம் என்பது இலாபம் உழைக்கும் வியாபாரம் அல்லவெனவும், இது ஒரு சேவை எனவும் குறிப்பிட்ட அமைச்சர், நீண்ட காலமாக முன்னெடுக்கப்பட்டு வந்த நடைமுறையில் மாற்றத்தை கொண்டு வரும்போது பாரிய பிரச்சினைகளுக்கு நாம் முகம் கொடுக்க நேரிட்டதாகவும், எனினும் இது தவிர்க்க முடியாத ஒன்று என்பதோடு, இறுதியில் மக்களுக்கே நன்மைகள் சென்றடையும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் 48 வகை மருந்துகளின் விலைகள் குறைக்கப்பட்டபோது அரசாங்கத்துக்கு உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் என் மீது பாரிய அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கண் வில்லைகளின் விலைகள் குறைக்கப்பட்ட போதும் இதேபோன்ற நிலைமை காணப்பட்டதாகவும், பல தூதுவர்கள் தன்னுடன் இது தொடர்பில் சந்தித்துப் பேசியதாகவும், எனினும் நல்லாட்சி அரசாங்கத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாக கூறிய கொள்கையில் இருந்து சிறிதும் விலகவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

அரசாங்கத்தின் கொள்கை நாட்டின் இளைஞர்களை அடிப்படையாகக் கொண்டது எனவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தனக்கும் 2015ஆம் ஆண்டு ஜனவரி 08ஆம் திகதிக்கு முன்னர் ஆதரவாளர்கள் இருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

புகையிலை விலையை அதிகரிக்கும் விடயத்தில் ஜனாதிபதி மிகவும் உறுதியாக செயற்பட்டதாகவும், புகையிலை நிறுவனத்தார் தாங்கள் விரும்பினால் ஸ்ரீலங்காவில் தமது செயற்பாடுகளை நிறுத்தி விட்டு நாட்டை விட்டுச் செல்ல முடியும் எனவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts