பல்கலைக்கழக விரிவுரைகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் பல்வேறுபட்ட பணிப் புறக்கணிப்பால் மூடப்பட்டுள்ளதால் மாணவர்களது கல்விசார் நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்த பட்சம் 6வீதம் இலவசக்கல்விக்கு ஒதுக்க வேண்டும். உயர்கல்வியை தனியார் மயப்படுத்துவதில் ஒரு முறையான ஒழுங்கு முறையையும் இலவச கல்வியை தொடர்ந்து அதே தரத்தில் பேணப்படவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பட்டதாரி மாணவர்களின் கல்வித்தகமைக்கேற்ப தரமான வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என இந்த ஆர்ப்பாட்டத்தின் போது அவர்கள் வலியுறுத்தினர்.
இது தொடர்பில் மாணவர் ஒன்றியத்தினால் சனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதம் வருமாறு
கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் பல்வேறு பட்ட பணிப்புறக்கணிப்புகளால் மூடப்பட்டுள்ள சூழ்நிலையில் மாணவர்களது கல்வி சார் நடவடிக்கைகள் முற்றாகப்பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றன. ஜூன் மாத இறுதிவரை கல்வி சாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்புகளில் ஈடு பட்டனர். ஜூலை மாத தொடக்கத்திலிருந்து இன்றுவரை விரிவுரையாளர்களும்தத்தமது கோரிக்கைகளை முன்னிறுத்தி பணிப்புறக்கணிப்புகளில் ஈடு பட்டு வருகின்றனர். இதன் காரணமாக மாணவர்களான எமது பொன்னான கல்வி நேரம் வீணடிக்கப்பட்டு வருகின்றது.
ஆகவே மேதகு ஜனாதிபதியவர்கள் இவ்விடயத்தில் தலையிட்டு எமது கீழ்க்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் மூலம் , பல்கலைக்கழக விரிவுரைகளை உடன் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
1. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்த பட்சம் 06 வீதத்தை ஐ இலவசக்கல்விக்கு ஒதுக்க வேண்டும். இதன் மூலம் நிலைபேறான தரமான இலவசக்கல்வி தொடர்ந்து பேணப்பட முடியும்.
2. உயர்கல்வியை தனியார் மயப்படுத்துவதில் ஓர் முறையான ஒழுங்கு முறையும் இலவச உயர்கல்வி தொடர்ந்து அதே தரத்தில் பேணப்படவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
3. பட்டதாரி மாணவர்களின் கல்வித்தகைமைக்கேற்ப தராதரமான வேலைவாய்ப்புகள் வழங்கப்படவேண்டும்.
4. பல்கலைக்கழக மாணவர் அனுமதியில் இசட் புள்ளி பற்றிய குழறுபடிகள் நீக்கப்பட்டு பல்கலைக்கழக அனுமதிகள் உரிய வேளையில் இடம்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
5. பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கல்விசார ஊழியர்கள் ஆகியோரின் சமபளப்பிரச்சினைகள் உடனடியாகத்தீர்க்கப்பட்டு மாண்வர்களின் கல்வி நடவடிக்கைகள் சுமூகமாக தொடர்ந்து இடம்பெற அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்
எமது இந்த நியாயமான கோரிக்கைகளை தாங்கள் சாதகமான முறையில் பரிசீலித்து உரிய தீர்வுகளை உடனடியாக வழங்குவதன் மூலம் எமது கல்வியில் காணப்படும் தற்போதைய தடையான சூழ்நிலைமைகளை களைந்து எமது கல்விச்செயற்பாடுகள் எவ்வித இடர் பாடுகளுமின்றி தொடர்ந்து இடம் பெற ஆவனெ செய்ய வேண்டுமெனக்கேட்டுக்கொள்கின்றோம்.