குற்றச் செயல் குறைந்த மாவட்டமாக யாழ்ப்பாணம் திகழ்கிறது! யாழ்.பிரதி பொலிஸ்மா அதிபர்

யாழ்.மாவட்டத்தில் குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதில் பொலிஸாரின் அர்ப்பணித்த செயற்பாடுகள் காரணமாக ஏனைய மாவட்டங்களை விட யாழ்ப்பாணம் குற்றச் செயல்கள் குறைந்த மாவட்டமாக திகழ்வதாக யாழ்.பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார்.யாழ்.பொலிஸ் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்விதம் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ். நல்லூரில் பொலிஸாரின் அர்ப்பணித்த செயற்பாடுகள் காரணமாக பாரிய குற்றச் செயல்கள் எவையும் பதிவாகவில்லை. அத்துடன் பொலிஸாரின் தீவிர கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.

நான்கு குற்றச் சம்பவங்களை விட வேற எந்த குற்றச் செயல்களும் நல்லூரில் நடைபெறவில்லை.

வங்கியில் தங்க முலாம் பூசப்பட்ட தங்க ஆபரணங்களை அடகு வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவரை தேடி வருகின்றோம்.

கே.கே.எஸ் வீதியில் கடை உடைக்கப்பட்டு திருட்டுச் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.

யாழ்.செம்மணி வீதியில் தரித்து நின்ற லொறி உடைக்கப்பட்டு 80,000 ரூபா பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளன.

ஊர்காவற்துறை சென் அன்ரனிஸ் தேவாலயத்தில் இரண்டு சிலைகள் திருடப்பட்டுள்ளன.

கொடிகாமப் பகுதியில் கோப் சிற்றி உடைக்கப்பட்டு 16,800 ரூபா பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளன.

நெடுந்தீவில் சூரிய மின்கலம் திருடப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.

இளவாலைப் பகுதியில் தனித்திருந்த முதியவரை கிணற்றுக்குள் தள்ளி அவரின் தங்க மாலை அபகரித்தமை தொடர்பில் சந்தேகத்தில் இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நல்லூர் ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்.பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் காலை 10.00 மணிக்கு விசேட பூசை வழிபாடுகள் நடைபெறவுள்ளதாக யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.

நல்லூர் ஆலய திருவிழா காலத்தில் யாழ். பொலிஸாரினால் மாமிச தவிர்ப்புச் செய்யப்பட்டது. அத்துடன் ஆண் பொலிஸார் பக்தர்கள் போன்று வேட்டியும் பெண் பொலிஸார் சுடிதார் மற்றும் சேலை அணிந்தவாறு கடமையில் ஈடுபட்டனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts