9 கிராம அலுவலர் பிரிவுகள் வலி.வடக்கில் பறிபோகும் ?

வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் 9 கிராம அலுவலர் பிரிவுகளை இராணுவத்தினர் நிரந்தரமாகத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்போகின்றனர் என்று நம்பகமாகத் தெரியவருகின்றது. இந்த 9 கிராம அலுவலர் பிரிவுகளிலும் தமிழ் மக்கள் மீளக் குடியமர்வதற்கு அனுமதி வழங்கப்படாது என்றும் தெரிகின்றது.இந்தப் பிரச்சினை தொடர்பாக, கொழும்பில் நடைபெற்ற தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது. இராணுவத்தினரால் நிரந்தரமாக ஆக்கிரமிக்கப்படப் போகும் நிலப் பகுதியில் பலாலியைச் சுற்றி மேலும் பல நிரந்தரப் படை முகாம்கள் அமைக்கப்படும் என்று பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ இந்தக் கூட்டத்தில் தெரிவித்திருக்கிறார்.

இதனால் காணிகளை இழக்கப்போகும் தமிழ் மக்களுக்கு இழப்பீட்டுடன் மாற்றுக் காணிகள் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த 9 கிராம அலுவலர் பிரிவுகளையும் இராணுவம் நிரந்தரமாக ஆக்கிரமிப்பதற்கு முன்னதாக, தற்போது இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள 12 கிராம அலுவலர் பிரிவுகள் விடுவிக்கப்படவுள்ளன.

1990 ஆம் ஆண்டு போர் காரணமாக வலி. வடக்கின் பெரும்பான்மையான பகுதிகளிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்திருந்தனர். இந்த நிலையில் 1996 ஆம் ஆண்டு இராணுவம் யாழ். குடாநாட்டைக் கைப்பற்றிய பின்னர் வலி. வடக்கின் பெரும்பான்மையான பகுதிகள் உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டன.

2009 ஆம் ஆண்டு போர் நிறைவடைந்ததன் பின்னர் வலி. வடக்கில் உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த பகுதிகள் சிறுது சிறிதாக விடுவிக்கப்பட்டன.
2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி 3 கிராம சேவகர் பிரிவுகளும் 2011 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் திகதி 10 கிராம சேவகர் பிரிவுகளும் விடுவிக்கப்பட்டன.

எஞ்சிய பகுதிகள் விடுவிக்கப்படாத நிலையில் இந்த வருடம் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி தொடக்கம் உயர் பாதுகாப்பு வலயத்தின் முன்னரங்கப் பகுதிகளில் நிரந்தரப் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டு வந்தது.

இது, ஏனைய பகுதிகள் விடுவிக்கப்படமாட்டா என்ற அச்சத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தின. இந்த நிலையில் கடந்த மாதம் 20 ஆம் திகதி யாழ். மாவட்டத்துக்கு வருகை தந்திருந்த பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ, யாழ். மாவட்ட இராணுவத் தளபதியுடன் எஞ்சிய பகுதிகளின் மீள்குடியமர்வு நடவடிக்கை தொடர்பில் கலந்துரையாடியிருந்தார்.

இதன் பின்னர் அண்மையில் கொழும்பில் நடைபெற்ற பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் மேற்படி 12 கிராம சேவகர் பிரிவுகளையும் விடுத்து எஞ்சிய பகுதிகளே இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுப் பகுதி எனக் காட்டப்பட்டுள்ளது. மேலும் இந்தக் கலந்துரையாடலில் பேசிய பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ, பலாலி விமான நிலையத்தை அண்மித்த பகுதிகளில் நிரந்தர இராணுவ முகாம்கள் அமைக்கப்படும் எனவும் இதனால் பாதிக்கப்படும் மக்களுக்கு நஷ்டஈடும் மாற்றுக் காணியும் வழங்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது வலி. வடக்கின் உயர் பாதுகாப்பு வலயத்தின் முன்றல்களில் உள்ள காவலரண்கள் இராணுவத்தினரால் பின் நகர்த்தப்பட்டு வருகின்றன. தற்போது காங்கேசகன்துறை மேற்கு (ஜே/233), காங்கேசன்துறை மத்தி (ஜே/234), காங்கேசன்துறை தெற்கு (ஜே/235), தையிட்டி தெற்கு (ஜே/250), வறுத்தலைவிளான் (ஜே/241), பளைவீமன்காமம் வடக்கு (ஜே/236), பளைவீமன்காமம் தெற்கு (ஜே/237) ஆகிய கிராம அலுவலர் பிரிவுகள் முழுமையாக விடுவிக்கப்பட உள்ளன.

குரும்பசிட்டி (ஜே/242), தையிட்டி வடக்கு (ஜே/249), வயாவிளான் மேற்கு (ஜே/245), குரும்பசிட்டி கிழக்கு (ஜே/243), கட்டுவன் (ஜே/238) கிராம சேவகர் பிரிவுகள் பகுதியாகவும் விடுவிக்கப்படவுள்ளன.

இவற்றில் பளைவீமன்காம் வடக்கு (ஜே/236), பளைவீமன்காமம் தெற்கு (ஜே/237), கட்டுவன் (ஜே/238), வறுத்தலைவிளான் (ஜே/241), குரும்பசிட்டி கிழக்கு (ஜே/243, வயாவிளான் மேற்கு (ஜே/243) என்பன பகுதியாக முன்னர் விடப்பட்டிருந்த நிலையில் தற்போது எஞ்சிய பகுதிகள் விடுவிக்கப்படவுள்ளன.

இதேவேளை மயிலிட்டி வடக்கு (ஜே/246), தையிட்டி கிழக்கு (ஜே/247), மயிலிட்டித்துறை தெற்கு (ஜே/248), மயிலிட்டித்துறை வடக்கு (ஜே/251), பலாலி தெற்கு (ஜே/252), பலாலி கிழக்கு (ஜே/253), பலாலி வடக்கு (ஜே/254), பலாலி வடமேற்கு (ஜே/255), பலாலி மேற்கு (ஜே/256) கிராம சேவையாளர் பிரிவுகள் தொடர்ந்தும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டினுள்ளேயே இருக்கும்.

இதன் காரணமாக 3 ஆயிரத்து 129 குடும்பங்களைச் சேர்ந்த 12 ஆயிரத்து 324 பேர் தொடர்ந்தும் பாதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்படுகிறது.

Related Posts