மலேசியாவின் கோலாலம்பூர் விமானநிலையத்தில் வைத்து படுகொலையாக இருக்கலாம் என தோன்றுகின்ற தாக்குதல் ஒன்றில், வட கொரியாவின் அதிபர் கிம் ஜோங் உன்னின், பிரிந்து வாழும் ஒன்றுவிட்ட சகோதரன் கொல்லப்பட்டுள்ளார்.
மக்கௌவுக்கு செல்ல விமானத்தை பிடிப்பதற்கு செல்லும் வழியில் திங்கள்கிழமை கிம் ஜோங் நாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக மலேசிய காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் வழியில், அவர் இறப்பதற்கு முன்னால், பின்னால் இருந்து தாக்கப்பட்டதாகவும், அவருடைய முகத்தின் மீது திரவம் தெளிக்கப்பட்டதாகவும் கிம் ஜோங் நாம் கூறியுள்ளார்.
அவர் விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்ற தகவல்களின் மத்தியில், அவருடைய இறப்புக்கான காரணத்தை அறிய பிரேதப் பரிசோதனை நடத்தப்படவுள்ளது.
நாடு கடந்து வாழ்ந்து வந்த கிம் ஜோங் நாம், வட கொரிய முகவர்களால் கொல்லப்பட்டிருக்கலாம் என்று உறுதியாக நம்புவதாக அமெரிக்க அரசு வட்டாரம் தெரிவித்திருக்கிறது.