நெருக்கடிக்கு தீர்வுகாணும் வரை மாணவர்களை சேர்ப்பது நிறுத்தமுடியாது என்று மாலம்பே தனியார் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் தலைவரான மருத்துவர் நெவில் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
தீர்வு கிடைக்கும்வரை 6 மாதங்களுக்கு மாணவர்களை சேர்ப்பதை தற்காலிகமாக நிறுத்தும்படி உயர்கல்வி அமைச்சு விடுத்த வேண்டுகோளை மருத்துவர் நெவில் பெர்ணான்டோ நிராகரித்துள்ளார்.
சிறந்த மருத்துவக் கற்கைகளுக்காக தமது பல்கலைக்கழகத்தில் அதிகூடிய சம்பளத்திற்கு விரிவுரையாளர்கள் பணியாற்றுவதாகவும், திடீரென மாணவர்கள் உள்ளீர்ப்பதை நிறுத்திவிட்டால் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க தமக்கு நேரிடும் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
சைட்டம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஒருபாடத்திற்காக பயிற்சி வழங்கும் சந்தர்ப்பத்திற்காக அரச வைத்தியசாலைகளில் தலா 50 ஆயிரம் ரூபா வீதம் வழங்கியதாக அந்தப் பல்கலைக்கழகத்தின் தலைவர் கூறியுள்ளார்.
இப்படியிருந்தும் தொடர்ந்து பயிற்சிக்கான சந்தர்ப்பத்தை அளிப்பதற்கு அரச வைத்தியசாலைகள் இடமளிக்கவில்லை என்றும் அவர் சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
மருத்துவப் பட்டத்திற்கான அங்கீகாரம் நீதிமன்றத்தினால் அளிக்கப்பட்டுள்ள நிலையில் சைட்டம் பட்டதாரிகளை மருத்துவர்களாக ஸ்ரீலங்கா மருத்துவப் பேரவை பதிவுசெய்யாவிட்டால் அது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகிவிடும். எனவே அதற்கெதிராக மாணவர்கள் வழக்கு தொடர்வார்கள் என்று மருத்துவர் நெவில் பெர்ணான்டோ எச்சரித்துள்ளார்.
எவ்வாறாயினும் சைட்டம் பல்கலைக்கழகப் பிரச்சினை குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தீர்வுகாண்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வாரம் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.