இலங்கையில் ஒரே நாளில் 550 படையினர் கைது!

இலங்கை இராணுவத்திலிருந்து தப்பிச்சென்றவர்களில் சுமார் 550 பேரை ஒரே நாளில் கைது செய்துள்ளதாக இராணுவத்தரப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தை தொடர்ந்து இராணுவத்திலிருந்து தப்பிச்சென்றவர்கள் 550 பேர், ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி தேடுதல் நடவடிக்கைகள் மூலம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இறுதி யுத்தத்தில் பங்குபற்றிய இராணுவத்தினரில் சுமார் 43000 பேர் தப்பிச் சென்றிருந்ததோடு, அவர்களுக்கான பொது மன்னிப்பு காலத்தில் இராணுவத்திலிருந்து சட்டப்பூர்வமாக விலகிச்செல்வதற்கு, பெரும்பான்மையானவர்கள் ஒத்துழைப்பு வழங்கவில்லை என இராணுவ தளபதி ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

குறித்த நடவடிக்கையின் காரணமாக ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவில் படையினர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், முறையாக அரசிடம் சரணடைந்து பொதுமன்னிப்பு பெற்றவர்கள் தண்டனையில் இருந்து தப்பியுள்ளதோடு, எஞ்சிய படையினரை சட்டப்பூர்வமாக இராணுவத்திலிருந்து விளக்கவும், இணைத்து கொள்ளவுமே குறித்த கைது நடவடிக்கைகள் இடம்பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த டிசம்பர் மாதம் பொது மன்னிப்பு காலம் முடிவடைந்த நிலையில், சுமார் 9000 முன்னாள் படையினர் தாமாக முன்வந்து பொது மன்னிப்பு பெற்றுள்ளனர். எஞ்சிய படையினரை சட்டப்பூர்வமாக விடுவிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என இராணுவ தளபதி ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts