எழுக தமிழோடு இணைந்து கொள்வதற்கு பெண்கள் அமைப்புக்கள் துணிவோடு முன்வரவில்லை என தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரான தம்பிப்போடி வசந்தராஜா தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு எழுக தமிழ் நிகழ்வில் பெண்களுக்கு மேடையில் பேச வாய்ப்பளிக்கப்படவில்லை என வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனின் குற்றச்சாட்டுத் தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை் குறிப்பிட்டுள்ளார்.
மேடையில் ஏறுவதற்கு அனந்தி சசிதரன் வேண்டுகோளை முன்வைத்திருந்ததாகவும் எனினும் தமிழ் மக்கள் பேரவையின் மத்திய குழுவின் தீர்மானத்தின்படி தமிழ் மக்கள் பேரவையிலுள்ள அங்கத்தவர்களைத் தவிர வேறு எவரும் எழுக தமிழ் மேடைப் பேச்சுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிங்களத் தலைவர்கள் உட்பட வேறு கட்சித் தலைவர்களும் மட்டக்களப்பு எழுக தமிழ் மேடையில் உரையாற்றுவதற்கு வேண்டுகோள் விடுத்தாகவும் அவர்களில் எவருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும் வசந்தராஜா குறிப்பிட்டுள்ளார்.
அனந்தி சசிதரன் யாழ்ப்பாணத்தில் வைத்தே மட்டக்களப்பு எழுக தமிழ் மேடையில் உரையாற்றுவதற்கு வாய்ப்பளிக்குமாறு வேண்டுகோள் விடுத்ததாகவும் அதற்கு தாங்கள் மறுத்து விட்டதாகவும் தமிழ் மக்கள் பேரவை வடக்குப் பிரிவால் தனக்கு அறிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அனந்தி தமிழ் மக்கள் பேரவையில் இணைந்து கொண்டிருந்தால், அவருக்குப் பேசுவதற்கு வாய்ப்பளித்திருக்க முடியும் எனக் குறிப்பிட்ட அவர்,
தமிழ் மக்கள் பேரவை உருவாகி ஒன்றரை வருடங்கள் கழிந்து விட்ட போதிலும், அனந்தி ஏன் தனது அமைப்பை இணைத்துக் கொள்ளவில்லை என்பதற்கான காரணம் தமக்குத் தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெண்கள் தங்களுக்கான குரலாக தாங்களே நேரடியாக எழுக தமிழில் உரையாற்ற வேண்டும் என்கின்ற கோரிக்கையை எவரும் முன் வைத்திருக்கவுமில்லை என்றும் அவ்வாறான கோரிக்கைகள் வைத்திருந்தால் அதனைப் பரிசீலித்திருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பிலுள்ள எத்தனையோ பெண்கள் அமைப்புக்களிடம் தமிழ் மக்கள் பேரவையுடன் இணைந்து கொள்ளுமாறு நேரில் சென்று வேண்டுகோள் விடுத்ததாகவும் அந்த பெண்கள் அமைப்புக்கள் எவையும் துணிச்சலோடு முன்வரவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த அமைப்பில் சேர்ந்து கொள்வதற்கு அவர்கள் அச்சத்தோடு இருப்பதாகவும் தமிழ் மக்கள் பேரவையை அவர்கள் ஆயுதக்குழு என்று நினைத்து, இணைந்து கொள்வதற்கு அச்சப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எழுக தமிழ் பிரகடனத்தில் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுகச்கு வாழ்வாதாரத்திற்கு வழிவகை கண்டாக வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளதாகவும் பெண்களை தாம் புறக்கணிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்தி
‘எழுக தமிழ்’ பெண்களை புறக்கணித்துவிட்டது: ஆனந்தி