முதலமைச்சர் ஆசனத்தில் அமர்வதற்கு, ஜெயலலிதாவுடனான நட்பு மட்டுமே போதுமான தகுதி அல்ல என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகள் குறித்து வெளிப்படையாகக் கருத்துத் தெரிவிக்கும் வழக்கமுடைய நடிகர் கமல்ஹாசன், தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஆங்கிலத் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தமிழகத்தின் தற்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இதுவரை முதல்வர் என்ற பதவிக்குக் களங்கம் விளைவிக்கவோ அல்லது அந்தப் பதவிக்குத் தகுதியின்மையையோ இதுவரை வெளிப்படுத்தவில்லை என்றும், இதனால் அவரே தொடர்ந்து முதல்வர் பதவியில் இருக்கலாம் என்றும், ஜனநாயகத்தை நிரூபிக்கும் ஒரு கருவியாகவே அவரைத் தான் கருதுவதாகவும் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.
ஒருவருடன் நீண்ட காலம் பழகினார் என்பதற்காக அவருடைய தொழிலை இன்னொருவர் திடீரெனச் செய்துவிட முடியாது. எனது தந்தை ஒரு சட்டத்தரணி. அவருடனேயே பல வருடங்கள் வாழ்ந்திருக்கிறேன் என்பதற்காக நீதிமன்றில் போய் நான் வாதிட முடியாது. நான் ஒரு நடிகன். நடிப்பதற்குப் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறேன்.
பன்னீர்செல்வம் எனக்கு நண்பரும் கிடையாது, எதிரியும் கிடையாது. எனினும், ஜனநாயகத்தை மலரச் செய்வதற்கான கருவியாக அவரைப் பார்க்கிறேன். மேலும், மக்கள் தம்மை ஆள்பவரைக் கட்டுப்படுத்தக்கூடியவர்களாக இருக்கவேண்டும் என்றும் விரும்புகிறேன்.
சசிகலாவின் தகுதியையோ, தமிழ்நாட்டு மக்களின் தகுதியையோ நான் அறியேன். எனினும் ஊழலின் மொத்த வடிவாக விளங்கும் சசிகலா, மக்களின் விருப்புக்கு மதிப்புக் கொடுக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
இவ்வாறு அந்தப் பேட்டியில் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.
மேலும், தமிழகத்தின் தற்போதைய நிலை குறித்துக் குரல் கொடுக்கும்படி நடிகர் மாதவனுக்கும் கமல்ஹாசன் ட்விட்டர் மூலம் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.