பட்டதாரிகளுக்கு உறுதியளிக்கப்பட்ட வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படாத நிலையில், வடமாகாணத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கான அவசர கலந்துரையாடலொன்று நாளை (ஞாயிற்றுக்கிழமை) நல்லூர் ஆலய முன்றலில் நடைபெறவுள்ளது.
இதன்போது, பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பினை பெற்றுக்கொள்வது தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தின் தலைவர் துஷாந்தன் தெரிவித்துள்ளார்.
காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ள குறித்த கலந்துரையாடலில், வடமாகாண பல்கலைக்கழகத்தின் உள்வாரி, வெளிவாரிப் பட்டதாரிகள் மற்றும் உயர்தேசிய டிப்ளோமா பட்டதாரிகள் ஆகியோரை தவறாது கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
வட மாகாணத்தில் சுமார் ஐயாயிரத்திற்கும் அதிகமான வேலையற்ற பட்டதாரிகள் உள்ள நிலையில், அவர்கள் பல தடவைகள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.