வடக்கு கிழக்கு இணைப்பு குறித்து கிழக்கு முதல்வருடன் பேச வடக்கு முதலமைச்சர் தயார்!

வடக்கு- கிழக்கு இணைப்பு தொடர்பில் பேச கிழக்கு மாகாண முதலமைச்சர் முன்வந்தால் அவருடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் பேரவைக்கும் முஸ்லிம் சிவில் அமைப்புகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (வெள்ளிக்கிழமை) வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் மட்டக்களப்பு தாண்டவன் வெளியில் உள்ள கூட்டுறவு சங்க மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த முதலமைச்சர்,

மத்திய அரசின் கீழ் தமிழர்களுக்கு கிடைக்கின்ற தீர்வு பொறிமுறை, முஸ்லிம்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் எங்களுக்கு வேறுபட்ட கருத்து இல்லை.

முஸ்லிம் மக்களுக்கும், தமிழ் மக்களுக்கும் உள்ள பிரச்சினைகளை இருசாராரும் இணைந்து பேசித் தீர்த்துக் கொள்ளக் கூடிய பொறிமுறையை ஏற்படுத்தவேண்டும்.

சிவில் அமைப்புக்கள் மக்களுடைய தேவைகளை அடிப்படையாக கொண்டு, தமிழ் பேசும் மக்களின் பிரச்சினை என்ன என்பதை அடையாளப்படுத்தி அதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி சிந்தித்து வருகின்றனர்.

இதேபோன்று முஸ்லிம் மக்களுக்குள்ள பிரச்சினைகளையும் நாங்கள் இருசாராரும் சேர்ந்து பேசி தீர்த்துக் கொள்ளக் கூடிய பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணப்பாடு எங்களுடைய கலந்துரையாடலில் தெரிகின்றது. அதற்கு பூரண சம்மதம் இருதரப்பாலும் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே அவர்களுடனான பேச்சுக்கள் தொடரும்.

எனினும், முஸ்லிம் மக்கள் எதனை வேண்டுகின்றார்கள் என்ற எண்ணப்பாடுகளை அவர்களே வெளிப்படுத்த வேண்டும். எனவே அதனை அடுத்த கூட்டத்தில் வெளிப்படுத்தும் முகமாக ஆவண ரீதியாக தெரிவிப்பதாக தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, வடக்கு- கிழக்கு இணைப்பு தொடர்பில் பேச கிழக்கு மாகாண முதலமைச்சர் முன்வந்தால் அவருடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் எனவும் குறிப்பிட்டார்.

Related Posts