அமெரிக்காவுக்குள் படகு ஒன்றின்மூலம் சட்டவிரோதமாக நுழைய முற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 6 இலங்கையர்கள் உட்பட 15பேரை அமெரிக்க கண்காணிப்புப் படையினர் கைதுசெய்துள்ளனர்.
கியூபாவில் இருந்து அமெரிக்காவில் குடியேறிய ஒருவரே, இந்த சட்டவிரோத குடியேற்ற நடவடிக்கையை ஒழுங்கு செய்திருந்தார் என்று சந்தேகிக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட 15 பேரில் அவரும் அடங்கியுள்ளார்.
அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்புப் பிரிவு கண்காணிப்பு விமானம் ஒன்றினால் கடந்த செவ்வாய்க்கிழமை பஹாமஸ் அருகே இந்தக் குடியேற்ற வாசிகள் கப்பல் ஒன்றில் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மியாமிக்கு தென்கிழக்காக 12 கடல் மைல் தொலைவில் இந்தக் கப்பலை, தடுக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்புப் பிரிவினர் முனைந்தனர். ஆனால் கப்பல் நிறுத்தப்படவில்லை.
இதனையடுத்து கடலோரக் காவல்படையினர் எச்சரிக்கை வேட்டுக்களைத் தீர்த்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கப்பலில் இருந்தவர்களில் 14 பேர் 4 நாடுகளைச் சேர்ந்த சட்டவிரோத குடியேற்றவாசிகள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இலங்கையைச் சேர்ந்த ஆறு பேர், சீனாவைச் சேர்ந்த 6 பேர், ஜமைக்கா மற்றும் ஈக்வடோரைச் சேர்ந்த தலா ஒருவர் அதில் இருந்தனர்.
இவர்களிடம் தொடர்ந்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.