வவுனியா பூந்தோட்டம் நலன்புரி முகாம் மூடப்பட்ட போதிலும், 97 குடும்பங்கள் அங்கிருந்து வெளியேற முன்வரவில்லையென்றும், முகாம் காணப்பட்ட இடத்தின் அருகிலேயே அவர்கள் தொடர்ந்தும் வாழ்ந்து வருவதாகவும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
பூந்தோட்டம் நலன்புரி முகாம் தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி நேற்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பூந்தோட்டம் நலன்புரி முகாமில் 249 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 495 பேர் வாழ்ந்ததாகவும் கடந்த 2011ஆம் ஆண்டு குறித்த முகாம் மூடப்பட்டதன் பின்னர் அங்கிருந்த மக்கள் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட்டதாகவும் எனினும் 97 குடும்பங்கள் எந்த மீள்குடியேற்ற திட்டத்தின் கீழும் மீள்குடியேற முன்வரவில்லையென்றும் அமைச்சர் சுவாமிநாதன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.