அமெரிக்க வணிகத்தில் அதிபர் டிரம்பின் பயணத்தடை உத்தரவானது குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறி ஆப்பிள், ஃபேஸ்புக் மற்றும் கூகுள் உள்பட அமெரிக்காவில் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் கூட்டாக வழக்கு ஒன்றை தொடுத்துள்ளனர்.
சான் ஃபிரான்சிஸ்கோவில் உள்ள மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் குறைந்தது நூறு தொழில் நிறுவனங்கள் இந்த மனுவில் கையெழுத்திட்டு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுவில் சில தொழில்நுட்ப சாராத லெவி ஸ்டராஸ் போன்ற நிறுவனங்களும் கையெழுத்திட்டுள்ளன.
தற்போது தடையில் உள்ள ஏழு முக்கிய நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு வர விதிக்கப்பட்ட தடை ஆணையால் வெளிநாடுகளில் தங்களுடைய சேவையை விரிவுப்படுத்துவதற்கு தேவையான திறமையானவர்களை ஈர்க்க அமெரிக்க நிறுவனங்களுக்கு கடினமாக இருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது.
மேலும், அமெரிக்காவிலுள்ள 500 மதிப்புமிக்க நிறுவனங்களில் பாதி நிறுவனங்கள் குடியேறிகள் அல்லது அவர்களுடைய குழந்தைகளால் நிறுவப்பட்டதாக அந்த அறிக்கை சுட்டிக் காட்டியது.