சுமந்திரன் விவகாரம்: நெடியவனை இன்டர்போலிடம் ஒப்படைக்க நோர்வே மறுப்பு!

விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவரான நெடியவன் எனப்படும் பேரின்பநாயகம் சிவபரன் உள்ளிட்ட குழுவினரே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலைசெய்ய திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், நெடியவனை சர்வதேச பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கு நோர்வே அரசாங்கம் மறுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நோர்வேயில் விடுதலைப் புலிகளின் தலைவராக நெடியவன் செயற்பட்டு வருவதாக குறிப்பிடப்படுவதோடு, புலிகள் சார்பில் நிதி சேகரிப்பில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில் சுமந்திரனை கொலைசெய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, நெடியவனிடம் அந்நாட்டு பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர். எனினும், சுமந்திரன் கொலை முயற்சி தொடர்பாக தம்மை உத்தியோகபூர்வமாக அணுகினால் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக நோர்வே தூதரகம் தெரிவித்துள்ளது.

சுமந்திரன் கொலை முயற்சியுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஐவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts