வடக்கை போன்று தெற்கிலும் அன்றாடம் வாளால் வெட்டிக் கொல்லப்படும் சம்பவங்கள் பதிவாகின்றன எனத் தெரிவித்துள்ள பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன, வடக்கில் நடைபெறும் விடயங்களை மாத்திரம் பொய்யாக ஊதி பெரிதாக்க வேண்டாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
கம்பஹாவில் நடைபெற்ற நிகழ்வொன்றைத் தொடர்ந்து, அண்மையில் யாழ்.அரசடி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர் மேற்குறித்தவாறு குறிப்பிட்டுள்ளார்.
வடக்காக இருந்தாலும் தெற்காக இருந்தாலும் எவருக்கும் சட்டத்தை கையில் எடுக்க அனுமதிக்க முடியாதென குறிப்பிட்டுள்ள பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர், எனினும் நாடளாவிய ரீதியில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றதெனவும் இவற்றைத் தடுக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்றும் குறிப்பிட்டார்.
எனினும், எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டி வருவதைப் போன்று வடக்கில் நடைபெறும் இவ்வாறான சம்பவங்கள் இனவாதமோ மதவாதமோ அல்லவென்றும் இதனால் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லையென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து பொலிஸார், ராணுவத்தினர் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் கூடிய கவனஞ்செலுத்தி வருவதாகவும் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன குறிப்பிட்டுள்ளார்.