கருணா குறித்த விசாரணைகள் நிறைவு

முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மானுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு குறித்த விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக, பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இதன்படி, இந்த விசாரணை அறிக்கை சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.

அரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கருணா அம்மானுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட, வழக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போதே நிதி குற்ற விசாரணைப் பிரிவினர் மேற்கண்ட விடயத்தை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

இதேவேளை, கருணா அம்மானின் பாதுகாப்பு தொடர்பில் பிரச்சினைகள் காணப்படுவதால், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகி அவர் கையெழுத்திட வேண்டும் என்ற பிணை நிபந்தனையை தளர்த்துமாறு, பிரதிவாதி தரப்பில் ஆஜரான சட்டத்தரணி கோரிக்கை விடுத்தார்.

விடயங்களை ஆராய்ந்த நீதவான் அக் கோரிக்கையை ஏற்று மாதம் ஒருமுறை ஞாயிற்றுக்கிழமை கையெழுத்திட அனுமதியளித்துள்ளார்.

கடந்த ஆட்சிக் காலத்தில் பிரதி அமைச்சராக இருந்த கருணா அம்மானுக்கு வழங்கப்பட்ட பெறுமதி மிக்க வாகனங்களை, பிரதியமைச்சர் பதவியில் இருந்து விலகிய பின்னரும் மீள ஒப்படைக்காதிருந்ததாக இவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts