பல்கலை கல்விசாரா ஊழியர்கள் 7 ஆம் திகதி பணிப்பகிஷ்கரிப்பில்

சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கு சுற்றுநிருபம் வெளியிடப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்கலைக்கழகங்களிலுள்ள 14 ஆயிரம் கல்விசாரா ஊழியர்கள் எதிர்வரும் 07 ஆம் திகதி பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர்.

அகில இலங்கை பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்புக் குழு நேற்று (31) கூடியபோது இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தையடுத்து முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்த தீர்மானங்களை எடுக்க எதிர்வரும் 12 ஆம் திகதி மீண்டும் கூடுவதாகவும் அக்குழு தீர்மானித்துள்ளது.

இந்த வருடம் முதல் மேலதிக கொடுப்பனவுகளை அதிகரிப்பதாக உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல வாக்குறுதியளித்திருந்தும் அது வழங்கப்படவில்லையென தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையின் போது அரசாங்கம் இந்த வாக்குறுதியை தொழிற்சங்கங்களிடம் வழக்கியிருந்ததாகவும் அச்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

Related Posts