யாழ்.சுன்னாகம் கழிவு எண்ணெய் விவகார வழக்கில் ஆட்சேபனைகள் இருந்தால் அவற்றை ஒருமாத காலத்திற்குள் சமர்பிக்குமாறு உச்சநீதிமன்றம் வடமாகாண சபைக்கு கால அவகாசம் வழங்கியுள்ளது.
உச்சநீதிமன்ற நீதியரசர்களான பிரியசாத் டெப், புனநேக அலுவிஹார ஆகியோர் தலைமையிலான குழாம் முன்னிலையில் நேற்றைய தினம் இடம்பெற்ற மனு விசாரணையின்போது இந்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
சுன்னாகம் பகுதியிலுள்ள நோதன் பவர் நிறுவனத்திலிருந்து வெளியாகும் கழிவு எண்ணெய் அப்பிரதேசத்திலுள்ள குடிநீர் கிணறுகளில் கலந்ததாகவும், அதனால் மக்களின் உரிமை மீறப்பட்டிருப்பதாகவும் தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் அடிப்படை மனித உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டது.
சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மத்திய நிலையத்தின் பிரதானியாக செயற்படும் கலாநிதி ரவீந்திர காரியவசம் இந்த மனுவை தாக்கல் செய்திருக்கின்றார்.
இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றில் நேற்று நடைபெற்றது.
இதன்போது மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள வடமாகாண சபையை பிரதிநிதித்துவப்படுத்தி மன்றில் பிரசன்னமாகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி கமகேஸ்வரன், இந்த மனு தொடர்பில் ஆட்பேசனை இருப்பதான தெரியப்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்து ஆட்பேனைகளை சமர்பிப்பதற்கு வடமாகாண சபைக்கு ஒருமாதகால அவகாசம் வழங்குவதாக நீதியரசர்கள் குழாம் அறிவித்தது.
இந்த நிலையில் குறித்த மனுமீதான அடுத்தகட்ட விசாரணை எதிர்வரும் மே மாதம் 26ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது.
அதேவேளை சுன்னாகம் பகுதியில் இயங்கிவந்த மின் உற்பத்தி நிலையைத்தின் செயற்பாடுகளை நிறுத்துமாறு நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட காலக்கெடு மே மாதம் 26 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டது.