நெடுந்தீவு மக்களின் கடல் பயணத்தை இலகுபடுத்தும் நோக்கில் புதிதாக கட்டப்பட்ட ´´நெடுந்தாரகை´´ படகு வெள்ளோட்டம் விடப்பட்டதன் பின்னர் பயணிகள் சேவையில் ஈடுபடவே இல்லை என, வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த நிலையில், உடனடியாக இது குறித்து விசாரணை நடத்தி அடுத்த அமர்வில் பதிலளிக்கப்படும், என முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.
வட மாகாண சபையின் 83ம் அமர்வு நேற்றய தினம் நடைபெற்றது.
இதன்போதே மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் மேற்படி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், நெடுந்தீவுக்கான பயணிகள் போக்குவரத்தை இலகுபடுத்தும் நோக்கில் நெடுந்தாரகை என்ற படகு புதிதாக கட்டப்பட்டது.
அந்த படகு வெள்ளோட்டத்தில் அன்று ஓடியதற்கு பிறகு ஓடவே இல்லை. இதனால் நெடுந்தீவு மக்கள் வடமாகாண சபையின் மீது கடும் கோபத்துடன் உள்ளதாக கூறினார்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இந்த விடயம் தொடர்பாக விசாரணை நடத்தி அடுத்த அமர்வில் பதிலளிக்கப்படும் என கூறினார்.
மேலும் மாகாணசபை உறுப்பினர் க.விந்தன் கூறுகையில், 6 சிப்பந்திகள் இந்த படகை ஓட்டுவதற்காக நியமிக்கப்பட்டனர்.
அவர்களுக்கு 3 மாதங்கள் பயிற்சியும் வழங்கப்பட்டது. ஆனால் அவர்களால் படகை ஓட்ட முடியவில்லை. இதனால் கடற்படையினர் ஒத்துழைப்பு வழங்கினார்.
ஆனால் கடற்படையினரும் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க முடியாது. என கூறிவிட்ட நிலையில் அந்த படகினால் சேவையில் ஈடுபட முடியவில்லை என, கூறினார்.
இந்நிலையில் எதிர்வரும் 9ம் திகதி நடைபெறவுள்ள அமர்வில் இந்த விடயம் தொடர்பாக முதலமைச்சர் பதிலளிக்க உள்ளார்.