நடிகர் ராகவா லாரன்சின் சமீபத்திய நடவடிக்கைகள் எல்லாம் அரசியலுக்கு அவர் அச்சாரம் போடுவது போன்று இருப்பதாக செய்தி வௌிவந்திருந்தன, தற்போது அது உண்மையாகிவிட்டது, ஆம் தேவைப்பட்டால் நான் அரசியலுக்கு வரத் தயார் என்று அறிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு தொடர்பாக மாணவர்கள், இளைஞர்கள் நடத்திய எழுச்சி போராட்டத்தில் லாரன்ஸ் முழுக்க முழுக்க ஆதரவு தெரிவித்தார். அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ததோடு, களத்தில் இறங்கி போராடியும் வந்தார். போராட்டம் கடைசிநாளில் வன்முறையாக மாறியபோது கூட தொடர்ந்து மாணவர்கள் பக்கம் ஆதரவாக செயல்பட்டு வந்தார். பின்னர் முதல்வரை சந்தித்து போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
போராட்டம் முடிந்தபின்னரும் கூட போராட்டத்தில் ஈடுபட்ட பல இளைஞர்கள் லாரன்ஸ்க்கு துணையாக இருந்து வந்தார்கள். இந்நிலையில் லாரன்ஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசுகையில்…
ஜல்லிக்கட்டு என்ற விஷயத்திற்காக மெரினாவில் தெரியாத பல முகங்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்தோம், அதில் வெற்றி கிடைத்தது. ஆனால் அதை கொண்டாட முடியவில்லை. அடுத்தாக நாம் என்ன செய்யலாம் என்று இந்த இளைஞர்களுடன் எல்லாம் கலந்து பேசினேன். ஆனால் இது வௌியில் வேறு மாதிரி பேசப்படுகிறது. அதை தௌிவுப்படுத்தவே இந்த பிரஸ்மீட். இந்த போராட்டத்தில் மணிகண்டன் என்பர் கடல் நீரில் மூழ்கி இறந்துவிட்டார். அந்த செய்தியை கேட்டு அவரைப்பற்றி விசாரித்தோம். அம்பத்தூரில் அவரது வீடு இருப்பதாக கேள்விப்பட்டு அங்கு சென்றேன். அங்கு போனதும் ஒருமாதிரி ஆகிவிட்டது. அந்த குடும்பத்திற்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அதன்படி, மீனவ குடும்பத்திற்காக ரூ.10 லட்சம் உதவி செய்வேன் என்று சொல்லியிருந்தேன், ஆனால் இப்போது அரசாங்காமே உதவி செய்வதாக அறிவித்துள்ளது. இதையடுத்து அந்த தொகையை அந்த பையனுக்கு வழங்கினேன். அவரின் இழப்பை ஈடுகட்ட முடியாது. தமிழ் மண்ணுக்காக அந்த பையன் இறந்துள்ளார்.
முதல்வரிடம் போராட்டம் தொடர்பாக கைது செய்ப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும், காயம்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வைத்துள்ளோம். மேலும் இந்த ஜல்லிக்கட்டில் கிடைத்த வெற்றியை கொண்டாடும் விதமாக ஒரு பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளோம். இதற்கு தமன் இசையமைத்து பாடலை பதிவு செய்து கொடுத்தார் என்றார்.
தொடர்ந்து லாரன்ஸ் பேசும்போது, முழுக்க முழுக்க இளைஞர்களை கொண்டு நல்ல விஷயத்திற்காகவே கொண்டு செல்கிறோம். ஒருவேளை ஒரு விஷயத்திற்காக நாங்கள் போராடி அதில் பலன் கிடைக்கவில்லை என்ற சூழ்நிலை வந்தால் கண்டிப்பாக நாங்கள் அரசியலுக்கு வருவோம். எங்கள் இளைஞர்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுவார்கள். சூழ்நிலை வந்தால் கண்டிப்பாக நாங்கள் களம் இறங்குவோம். நாங்கள் வரவேண்டுமா இல்லையா என்பதை இளைஞர்கள்தான் முடிவு செய்வார்கள்.
எங்களுடன் இருப்பவர்கள் எந்த கட்சியையும், இயக்கத்தையும், தீவிரவாத அமைப்பையும் சேராதவன்(இருக்காது) என்று எழுதி கொடுக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக தேர்தல் நேரத்தில் பணம் வாங்க மாட்டேன் என்று எழுதி கொடுக்க சொன்னேன். அனைவருக்கும் உதவி மட்டுமே செய்வோம் என்றேன், அனைவரும் மகிழ்ச்சியுடன் சரி என்று ஏற்று கொண்டார்கள்.
ஜல்லிக்கட்டு விஷயத்தில் வெற்றி கிடைத்திருப்பதால் அதை கொண்டாட அனுமதி கேட்டிருக்கிறோம், கிடைத்தவுடன் அதை விமரிசையாக கொண்டாட உள்ளோம்.
போராட்டாக்காரர்களுக்கு உதவுவதற்காக நான் என் மனைவி, அம்மாவின் நகையை அடகு வைத்து உதவி செய்திருக்கேன் என்று உணர்ச்சிகரமாக பேசினார்.
இவ்வாறு லாரன்ஸ் பேசினார்.