மாலம்பே தனியார் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் (சைட்டம்) வழங்கப்படுகின்ற பட்டம் சட்டரீதியானது என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்றைய தினம் தீர்ப்பளித்துள்ளது.
அத்துடன் அந்தப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவுபெற்று வெளியேறும் மாணவர்கள் மருத்துவப் பேரவையில் தொழிற்துறையினராக பதிவுசெய்துகொள்வது அவசியமாகும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் மருத்துவப் பேரவைக்கு உத்தரவிட்டுள்ளது.
மாலம்பே பல்கலைக்கழகத்தில் கல்விகற்ற இரண்டு மருத்துவப்பீட மாணவர்கள் தாக்கல் செய்த ரிட் மனு மீதான தீர்ப்பை வழங்கிய மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மாலம்பே தனியார் பல்கலைக்கழகத்தில் பெற்றுக்கொள்ளப்படும் பட்டப்படிப்பை ஸ்ரீலங்கா மருத்துவப் பேரவை நிராகரிப்பதாக தெரிவித்தே குறித்த இரண்டு மாணவர்களும் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு இன்றைய தினம் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான விஜித் மலல்கொட மற்றும் எஸ். துரைராஜா ஆகியோர் தலைமையிலான குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
குறித்த தனியார் பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படுகின்ற பட்டப்படிப்பு சட்டவிரோதமானது என்று மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள ஸ்ரீலங்கா மருத்துவப் பேரவை எதிர்ப்பு வெளியிட்டிருப்பதாக நீதியரசர்கள் குழாம் தெரிவித்துள்ளது.
எனினும் இந்த எதிர்ப்புக்கள் அனைத்தையும் நிராகரிப்பதாக அறிவித்துள்ள நீதியரசர்கள் குழாம், உயர்கல்வி அமைச்சரினால் விடுக்கப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் மாலம்பே தனியார் பல்கலைக்கழகத்தினால் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற பட்டப்படிப்பு சட்டரீதியானது என்று சுட்டிக்காட்டிய மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
மேலும் இந்தப் பட்டப்படிப்பை ஏற்றுக்கொள்வதற்கு ஸ்ரீலங்கா மருத்துவப் பேரவைக்கு எந்தவித சட்டச்சிக்கலும் இல்லை என்று விளங்கப்படுத்திய மேன்முறையீட்டு நீதிமன்றம், மாலம்பே தனியார் பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படுகின்ற பட்டப்படிப்பை ஸ்ரீலங்கா மருத்துவப் பேரவையில் சம்பந்தப்பட்ட மாணவர்கள் தொழிற்துறையினராக பதிவுசெய்துகொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை சைட்டம் தனியார் பல்கலைக்கழகம் சட்டவிரோதமானது என்பதால் அதனை இழுத்துமூடுமாறு கூறி அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நாடளாவிய ரீதியில் கடந்த பல வருடங்களாக போராட்டங்களை நடத்திவந்தது.
குறித்த மனு மீதான தீர்ப்பு வழங்கப்பட்ட இன்றைய தினமும் நீதிமன்ற வளாகத்தில் கறுப்பு பட்டிகளை அணிந்தவாறு கவனயீர்ப்பு போராட்டத்திலும் மருத்துவப்பீட மாணவர்கள் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.