Ad Widget

டெங்கு ஒழிப்புக்கு புதிய செயற்றிட்டம்

வேகமாகப் பரவிவரும் டெங்கு நோயை ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்களுக்கு மேலதிகமாகப் புதிய செயற்திட்டமொன்று, அடுத்த வாரம் அறிமுகப்படுத்தப்படுமென, ஜனாதிபதி தெரிவித்தார். உயிர்க்கொல்லி டெங்கு நோயை ஒழிப்பதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்றிட்டங்களை மேலும் பலப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய செயற்றிட்டம் வெற்றிபெறுவதற்கு நாட்டு மக்கள் அனைவரினதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

தேசிய பல் மருத்துவமனையின் (போதனா) முதற் கட்டமான புதிய கட்டடத் தொகுதி திறந்து வைத்தல் மற்றும் இரண்டாம் கட்ட கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் இன்று (31) கலந்துகொண்டு உரையாற்றும் போதே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலவச மருத்துவ சேவையைப் பலப்படுத்துவதற்காக நிர்மாணிக்கப்பட்ட புதிய மருத்துவமனைகளை எதிர்காலத்தில் மக்களுக்கு உரித்தாக்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும், மக்களைப் பாதுகாப்பதற்காக சுகாதாரத் துறைக்கு தேவையான அனைத்து வசதிகளையும் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். மருத்துவ நிபுணர்கள் மற்றும் தாதியர்களின் பற்றாக்குறை சுகாதார துறையில் பாரதூரமான நெருக்கடியாக இருக்கிறது.

புதிய மருத்துவர்களை மருத்துவமனைகளுக்கு இணைப்பு செய்யும் முறைமையிலுள்ள சவால்களை நினைவூட்டிய ஜனாதிபதி, அந்த பிரச்சினைகளுக்கு மத்தியிலும் கூட நாட்டின் சுகாதார துறையினர் ஆற்றும் உன்னதமான பணியை பாராட்டுவதாக குறிப்பிட்டார். சுகாதார அமைச்சராக தான் இருந்தபோது சுகாதார துறையின் உயர்வுக்காக மேற்கொள்ள முற்பட்ட சில திட்டங்களை அமுல்படுத்துவதற்கு இடமளிக்கப்படவில்லையென நினைவுபடுத்திய ஜனாதிபதி, மருத்துவர்களுக்கு சேவை நிலையங்களை வழங்கும் போது ஜனாதிபதி அழுத்தம் கொடுப்பதாக செய்யப்படும் பிரசாரத்தை பலமாக நிராகரிப்பதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், மிகச் சிறந்த மக்கள் சேவையை வழங்குவதற்கு தேவையான சுதந்திரம், தன்னால் அமைச்சரவைக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் தேவையற்ற தலையீடுகள் இன்றி அவர்கள் செயற்பட முடியுமெனவும் தெரிவித்தார். 1200 மில்லியன் ரூபாய் செலவிலான ஒன்பது மாடி கட்டடத் தொகுதியை மக்களுக்கு உரித்தாக்கி, நினைவுப்பலகையை திறந்து வைத்த ஜனாதிபதி, புதிய கணினி மென்பொருள் ஊடாக முதலாவது நோயாளியைப் பதிவு செய்தார்.

மருத்துவமனையில் கண்காணிப்பில் ஈடுபட்ட ஜனாதிபதி, மதகுருமார்களின் ஆசிர்வாதத்துடன் மருத்துவமனையின் இரண்டாம் கட்டத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள ஒன்பது மாடி கட்டடத்துக்கான அடிக்கல்லை நாட்டினார். வெள்ளவத்தை விஜயாராமாதிபதி வணக்கத்துக்குரிய அஹங்கம ஆனந்த தேரர், தேசிய மருத்துவமனை ஆளணி பணிப்பாளர் பண்டித ரஜவெல்லே சுபூதி தேரர் உள்ளிட்ட மதகுருமார்களும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, பிரதியமைச்சர் பைஷால் காஷிம், அமைச்சின் செயலாளர் அனுர ஜயவிக்ரம, தேசிய பல் மருத்துவமனை பணிப்பாளர் புஸ்பா கம்லத்ஹே ஆகியோர் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Related Posts