பயங்கரவாத குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட ஐந்து முன்னாள் போராளிகளும் நேற்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோது அவர்கள் ஐவரையும் எதிர்வரும் 13ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த ஐவரும் அதிக வலுக்கொண்ட ஆயுதங்கள் வைத்திருந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குணசேகரலிங்கம் ராஜ்மதன்(அச்சுவேலி), கே.குலேந்திரன்(திருவையாறு-கிளிநொச்சி), எம்.தவேந்திரன்(கிளிநொச்சி), வி.விஜயகுமார்(மன்னார்), லூவிஸ் மரியநாயகம் அஜந்தன்(வடமாராட்சி) ஆகியோரே விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைக் கொலை செய்ய முயற்சித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு முன்னாள் போராளிகள் ஐவரை கைதுசெய்துள்ளதாக அரசாங்கத் தரப்பு புலனாய்வாளர்கள் தெரிவித்திருந்தனர்.
எனினும், இவர்கள் ஐவர் மீதும் சுமந்திரனைக் கொலை செய்ய முயன்றதாக எந்தவொரு வழக்கும் தாக்கல் செய்யப்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.
சான்றுப் பொருட்கள் தம்மிடமிருந்து எடுக்கப்பட்டவை அல்ல – முன்னாள் போராளிகள்
பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களான முன்னாள் போராளிகளை நேற்று (திங்கட்கிழமை) நீதிமன்றில் ஆஜர் படுத்திய பொழுது சந்தேக நபர்கள் தங்கள் மேல் சுமத்தப்பட்ட குற்றங்களை தாம் செய்யவில்லை எனவும்
கைபற்றிய சான்றுப் பொருட்கள் தம்மிடமிருந்து எடுக்கப்பட்டவை அல்ல எனவும் தாம் அக்குற்றங்களை புரியவில்லை எனவும் சட்டத்தரணிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டதிருந்த போதும் அதனை மன்றில் சமர்ப்பிக்க முடியவில்லை என அவர்கள் சார்பில் தோற்றிய சட்டத்தரணிகளில் ஒருவரான தில்லையம்பலம் அர்ச்சுனா தெரிவித்தார்.
அத்துடன் குறித்த சந்தேக நபர்கள் ஐந்து பேரையும் எதிர்வரும் இரண்டாம்மாதம் பதின்மூன்றாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கிளிநொச்சி நாதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளதுடன் B4717, B4917 ஆகிய சந்தேக நபர்களிடம் இருந்து கைபெற்றப்பட்டதாக கூறப்படும் சான்றுப் பொருட்களை அரச பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்குமாறும் மன்று பணித்துள்ளது என சட்டத்தரணி தெரிவித்தார்.