“தென்னாபிரிக்காவில் அரசியல் ரீதியான ஒரு தீர்வு பெற்ற பின்னரே, உண்மை, நல்லிணக்க ஆணைக்குழு அமைக்கப்பட்டது. மத்திய அரசாங்கம் அதைச் செய்து விட்டு, மக்களுக்கான நியாயமான அரசியல் தீர்வைத் தராது விட்டு விடுமோ என்ற ஓர் ஐயம், எம்மைப் பீடித்தே இருக்கிறது” என, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மயூரபதி ஆலய நலன்புரிச் சங்கத்தால், கல்விசார் உதவி ஊதியம் வழங்கும் நிகழ்வு, கிளிநொச்சி கூட்டுறவுச் சங்க மண்டபத்தில், நேற்றுக் காலை இடம்பெற்றபோது அவர் இதனைக் கூறினார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“1987ஆம் ஆண்டில் இலங்கை – இந்திய உடன்பாடு ஏற்பட்டபோது, மாவட்ட செயலாளர், வடமாகாண அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தார். எனவே, இப்பேர்ப்பட்ட நடவடிக்கைகள், எமக்குத் தெரிந்தே நடைபெற்றன.
“1992இல் ஜனாதிபதி பிரேமதாச, சட்டமொன்றைக் கொண்டுவந்து, மாகாண அரசாங்கத்தின் கீழ் இருந்த மாவட்ட செயலாளர், கிராம சேவையாளர் போன்றவர்களை, மத்தியின் கீழ்க் கொண்டுவந்து விட்டார். அதனால் நிர்வாகம், இரண்டாகப் பிளவுபட்டது.
“முன்னைய அரசாங்கத்தின் கீழ், மூடியவாறே செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நிலைமை, சற்றுச் சீரடைந்துள்ளது. வெளிப்படைத்தன்மை சற்றுப் புலப்படுகின்றது.
“தெற்கில் இருந்து வரும் சகோதரர்களையோ, மத்திய அரசாங்கப் பிரதிநிதிகளையோ வரவேற்பதில், எமக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. அதில் அரசியலும் கட்சியியலும் சேரும் போதுதான், சில முரண்பாடுகள் ஏற்படுகின்றன.
“எமது உரித்துக்களைத் தராது, முகாமிட்டிருக்கும் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் இராணுவ வீரர்களை வாபஸ் பெறாது, எம்மக்கள் சேவையில் ஈடுபடுவது, எம்மக்களை விலை கொடுத்து வாங்குவதாகவே அமையும். இது இவ்வளவும், அரசியல் சம்பந்தமான என் கருத்துக்கள். அவற்றைக் கூற வேண்டியது எனது கடமை என்று நினைத்துக் கூறியுள்ளேன்” என்றார்.
தொடர்புடைய செய்தி
ஐந்நூறு வன்னி மாணவர்களுக்கு உதவி