புதிய யாப்பு ஊடாக தேசியப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வு வந்துவிடுமோ என்ற அச்சத்தில் தென்னிலங்கையில் உள்ள இனவாத சக்திகள் தன்னை படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டியிருக்கலாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
எம்.ஏ.சுமந்திரனைப் படுகொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட சதித் திட்டம் ஒன்றை ஸ்ரீலங்கா அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.
தீவிரமான பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பது தொடர்பாக ஸ்ரீலங்கா பிரதமர் அலுவலகத்தில் இருந்து, இந்த மாத முற்பகுதியில் சுமந்திரனுக்குத் தகவல் எச்சரிக்கை அனுப்பப்பட்டிருந்ததாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இது தொடர்பில் எம்.ஏ.சுமந்திரனிடம் தெரிவிக்கையில்..
“பொலிஸார் சொன்ன விடயங்களே எனக்குத் தெரியும், 23ஆம் திகதி பொலிஸார் எனக்கு தகவல் தெரிவித்தார்கள். கைது செய்யப்பட்டவர்களிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்கள் எனக்கு அச்சுறுத்தல் காணப்படுவதை உறுதிப்படுத்துவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.“ எனக் குறிப்பிட்டார்.
இதனிடையே ஸ்ரீலங்காப பிரதமர் அலுவலகம் தனக்கு இது தொடர்பில் அறிவித்ததாகவும் குறிப்பிடும் அவர் “எதற்காக என்னை கொலை செய்ய திட்டமிட்டார்கள் என எனக்குத் தெரியாது. யார் இவர்களை இயக்குகிறார்கள் என்று எனக்குத் தெரியாது. வெளிநாட்டு சக்திகளோ தெரியாது. கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.“ எனவும் குறிப்பிட்டார்.
உயர்மட்டப் புலனாய்வு அறிக்கைகளுக்கு அமைய இதுதொடர்பாக முன்னாள் பேராளிகள் மூன்று பேரை பயங்கரவாத தடுப்பு பிரிவு கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கிளிநொச்சி பொலிஸார் உறுதிப்படுத்தினார்.
இதேவேளை கைது செய்யப்பட்டவர்கள் சார்பாக முன்னிலையான தனது பெயரை வெளிப்படுத்த விரும்பாத சட்டத்தரணி ஒருவர், கிளைமோர்கள் மற்றும் டெட்டனேற்றர்களை வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றார்.
எனினும் கைது செய்யப்பட்வர்களில் ஒருவரின் தாயார் கருத்து வெளியிடுகையில் “தனது பிள்ளை கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரிலேயே கைது செய்யப்பட்டதாகவும், எனினும் இவ்வாறான பாரதூரமான குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது“ எனவும் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்தி
சுமந்திரனைப் படுகொலை செய்ய சதி ; நான்கு முன்னாள் போராளிகள் கைது!