வடமாகாணத்தின் நீர்வளத்தை மீட்டெடுக்க மாகாணம் சார்ந்த கொள்கை திட்டமிடல் ஒன்றை வகுக்க வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது என வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
யாழ். பொது நூலக கேட்போர் கூட்டத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற வடமாகாண நீர்வள அபிவிருத்தி ஆய்வரங்கில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ‘விவசாய நடவடிக்கைகளை தங்கு தடையின்றி முன்னெடுத்துச் செல்லவும், தங்கிவாழும் நிலையிலிருந்து விடுபடவும் வடமாகாணத்தில் நீர்வளத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியம் காணப்படுகிறது.
எனவே நீர்வளத்தை மீட்டெடுக்க மாகாணம் சார்ந்த கொள்கை திட்டமிடல் ஒன்றை வகுத்தல் அவசியமாகவுள்ளது. இது தொடர்பான திட்டமிடல்கள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளன. ஆலோசனைகள், முன்மொழிவுகள் என்பவும் முன்வைக்கப்பட்டிருந்தன.
ஆனால், அந்த ஆலோசனைகள், முன்மொழிவுகள், ஆய்வுகள் என்பவற்றை மீண்டும் மேற்கொள்ளவேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது.
அதன்படி ஒரு சிறந்த, வடமாகாண சபையின் கொள்கை சார்ந்த ஆவணமொன்று தயாரிக்கப்படும் என எதிர்ப்பார்க்கிறேன். அதனை அரசியல்வாதிகள் என்ற ரீதியில் நாம் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்போம் என்றார்.