ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முல்லைத்தீவுக்கு இன்றைய தினம் விஜயம் செய்கின்ற நிலையில் கேப்பாப்புலவு மக்கள் பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை கொட்டும் மழைக்கு மத்தியிலும் முன்னெடுத்து வருகின்றனர்.
முல்லைத்தீவு, கேப்பாப்புலவுக்கு ஜனாதிபதி வருகை தரும் போது கவனயீர்ப்புப் போராட்டங்களில் ஈடுபடக்கூடாது என இராணுவத்தினர் எச்சரித்துள்ள நிலையிலும் அவர்கள் போராட்டத்தை இன்று காலை முதல் முன்னெடுத்து வருகின்றர்.
முல்லைத்தீவு மாவட்டத்துக்கு இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஜயம் செய்கின்றார்.
முதற்கட்டமாக 53 குடும்பங்களுக்குரிய 243 ஏக்கர் காணியை ஜனாதிபதி இன்றைய தினம் விடுவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எனினும், கேப்பாப்புலவு மாதிரிக் கிராமத்தில் வாழ்ந்து வரும் தங்களின் சொந்தக் காணிகள் விடுக்கப்படவில்லை என்றும் மாறாக வற்றாப்பளைக் கிராமத்தைச் சேர்ந்தவர்களின் காணிகள்தான் விடுவிக்கப்படும் பகுதியில் உள்ளன என்று கேப்பாப்புலவு மக்கள் குறிப்பிடுகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் உள்ளவர்களுக்கும் சில உறுதிக் காணிகள் கேப்பாப்புலவுப் பகுதியில் உள்ளதோடு அவையும் விடுவிக்கப்படவுள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் இன்று காலை 9 மணிமுதல் கேப்பாப்புலவு பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக ஒன்றுதிரண்ட 40 பேர் இந்தக் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.