சமூக வலைதளங்களில் என்னைப்பற்றி தவறான விஷயங்களை பரப்பி என்னை பழிவாங்குகிறார்கள் என்று விஷால் கூறியுள்ளார். ஜல்லிக்கட்டு தொடர்பாக கடந்த ஒருவார காலமாக நடந்து வந்த அமைதி போராட்டம் நேற்று சில இடங்களில் வன்முறையாக மாறியது. போலீஸ் பல இடங்களில் தடியடி நடத்தி மாணவர்களை கலைத்தனர். இந்நிலையில் மாணவர்கள் மீது தடியடி நடத்தியது சரியே என்று நடிகர் விஷால் கூறியதாக சகாயம் ஐஏஎஸ்., பேஸ்புக் பக்கத்தில் ஒரு செய்தி வெளியானது. இதனால் சமூக வலைதளங்களில் விஷாலுக்கு எதிராக கண்டன குரல்கள் எழுந்தன. அதேசமயம் சகாயம் தான் எந்த பதிவும் போடவில்லை என்றும், தான் பேஸ்புக்கில் இல்லை என்றும் கூறியிருந்தார்.
இந்தச்சூழலில் இவ்விஷயம் தொடர்பாக விஷாலுக்கு கண்ட குரல் எழ, இப்போது தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டு, அதில் தான் மாணவர்களுக்கு எதிராக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்று கூறியிருக்கிறார் விஷால்.
இதுப்பற்றி விஷால் மேலும் கூறியிருப்பதாவது… ‛‛மீண்டும் என்னைப்பற்றி தவறாக ஒரு செய்தியை பரப்பி வருகிறார்கள், நான் அந்த மாதிரி எந்த ஒரு செய்தியையும் வெளியிடவில்லை. என்னை பழிவாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வேறு ஒரு பிளாட்பார்மில் வாருங்கள். அதற்கு இது சரியான நேரம் கிடையாது. ஒரு உணர்வுப்பூர்வமான போராட்டத்தை மாணவர்கள் நடத்தி வருகிறார்கள். ஜல்லிக்கட்டு விஷயத்தில் நல்லது நடக்கும் என்று சொல்லியிருந்தேன், அதன்படி அவசரசட்டமும் வந்துள்ளது, ஜல்லிக்கட்டும் நடைபெற இருக்கிறது.
இந்த சமயத்தில் விஷால் அப்படி சொன்னார், விஷால் இப்படி சொன்னார் என்று தவறான செய்தியை பரப்பி வருகிறார்கள். இது வருத்தமளிக்கிறது. திரும்ப திரும்ப நான் சொல்ல சொல்ல என்று என்னை விளக்கமளிக்க வைக்கும் அந்த நபர்களுக்கு சொல்கிறேன், என்னை பழிவாங்க இது நேரமில்லை. ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பாக நான் என்றுமே தவறாக பேசியது இல்லை. சகாயம் பெயரையும், எனது பெயரையும் தவறாக பயன்படுத்துகிறார்கள், நான் எந்த கருத்தும் சொல்லவில்லை என்று மிகவும் தாழ்மையுடன் சொல்லிக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.