ழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேரத்துரை சந்திரகாந்தனின் உத்தரவின் பேரிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டுள்ளது ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் உச்சநீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
பிள்ளையானின் உத்தரவின் பேரில் சாந்தன் என்பவரே இந்தப் படுகொலையை புரிந்திருப்பது பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாகவும் உச்சநீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக எந்தவித சாட்சிகளும் இன்றி தாம் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து உச்சநீதிமன்றில் பிள்ளையான் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை நேற்றைய தினம் உச்சநீதிமன்றத்தில் இடம்பெற்றது.
சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் மன்றிற்கு அறிவிக்கப்பட்டுள்ள தகவல்களை ஏற்றுக்கொள்ள முடியாதென பிள்ளையான் தரப்பு சட்டத்தரணி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
எந்தவித சாட்சிகளும் அற்றநிலையில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பிள்ளையான் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் மன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பில் பிள்ளையான் மீது மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் எதிர்பார்ப்பதாக சட்டமா அதிபர் திணைக்களம் மன்றிற்கு தெரியப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் குறித்த மனு மீதான அடுத்தகட்ட விசாரணை எதிர்வரும் மே மாதம் 30ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.