கிழக்கு பல்கலைக்கழகத்திலிருந்து மாணவர்களை வெளியேற்றுவதை நிறுத்துமாறு கோரி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு வந்தாறுமூலை ஏறாவூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்றைய தினம் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
‘விடுதி மாணவர்களை வெளியேற்றுவதை நிறுத்து, சகல பல்கலைக்கழக மாணவர்களுக்கும் விடுதி வசதிகளைப் பெற்றுக் கொடு’ என்ற வாசகங்களைத் தாங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதுடன் அந்த சுவரொட்டிகளில் கிழக்குப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிழக்குப் பல்கலைக்கழகம் – வர்த்தக பீடம் இரண்டாம், மூன்றாம் வருட மாணவர்களுக்கான விடுதி வசதிகள் நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த மாணவர்கள் கடந்த நான்கு நாட்களாக பல்கலைக்கழக நிர்வாக கட்டடத்திற்குள் தங்கியிருந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் கிழக்கு பல்கலைக்கழக மாணவர் விடுதியிலிருந்து மாணவர்கள் அனைவரையும் வெளியேறுமாறு பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த நிலையிலேயே மாணவர்களை வெளியேற்றுவதை நிறுத்துமாறு கோரி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.