பல வருடங்களாக விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தம்மை விடுதலை செய்ய தமிழ் தேசிய கூட்டமைப்பு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கண்டி போகம்பர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போகம்பர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 18 தமிழ் அரசியல் கைதிகளை கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நேற்று (வெள்ளிக்கிழமை) நேரில் சென்று பார்வையிட்டார். இதன்போதே அவர்கள் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
இதன்போது மேலும் தெரிவித்த தமிழ் அரசியல் கைதிகள், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி உட்பட பல பிரதேசங்களை சேர்ந்தவர்கள் பல வருடங்களாக விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், எம்மை விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படும் நீதிமன்றங்களில் உள்ள நீதிபதிகள் பெரும்பாலும் சிங்களவர்களாக உள்ள நிலையில், எமக்கு நீதியான தீர்ப்பு கிடைப்பதில்லை. எனவே எம்மை தமிழ் நீதிபதிகள் விசாரணை செய்ய வேண்டும். அல்லது தமிழ் நீதிபதிகள் உள்ள நீதிமன்றங்களுக்கு எமது வழக்குகளை மாற்ற வேண்டும்.
மேலும், எமது விடுதலை குறித்து தமிழ் தேசியக்கூட்டமைப்பு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.