இறக்குமதி செய்யப்படும் அரிசியை எக்காரணங் கொண்டும் 76 ரூபாவிற்கு மேல் விற்பனை செய்ய முடியாதென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தனியார் வர்த்தகர்கள் மற்றும் அரிசி ஆலை உரிமையாளர்கள் விரும்பிபடி அரிசி விலையை அதிகரித்து பொதுமக்களை அசௌகரியத்துக்குள்ளாக்க முடியாது எனத் தெரிவித்த ஜனாதிபதி, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சந்தையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்க முடியாது என்றும் கூறினார்.
சுற்று நிருபங்களுக்கு உட்டுப்படாது மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பது அதிகாரிகளின் பொறுப்பாகும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சி நிலைக்கு மத்தியில் மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கும் அரசாங்கத்தின் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காகவும் நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி செயலணி அங்கத்தவர்களை நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தபோதே ஜனாதிபதி இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
அரிசி இறக்குமதியின் போது பாவனைக்கு பொருத்தமான அரிசி இறக்குமதி செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென ஜனாதிபதி இதன்போது வர்த்தக அமைச்சுக்கு ஆலோசனை வழங்கினார்.
அரசுக்கு சொந்தமான களஞ்சியசாலைகளில் இருந்து வழங்கப்பட்டுள்ள நெல்லை பெற்றுக்கொண்டுள்ள நெல் ஆலை உரிமையாளர்கள் அவற்றை அரிசியாக மாற்றி சந்தைக்கு வழங்கியுள்ளார்களா என்பதை கண்டறிந்து அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு ஆலோசனை வழங்கினார்.
தமது தனிப்பட்ட வேண்டுகோளின் பேரில் இலங்கைக்கு பத்தாயிரம் மெற்றிக்தொன் அரிசியை இன்னும் சில வாரங்களில் அன்பளிப்பாக வழங்க இந்தோனேசிய அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சி நிலைக்கு முகம்கொடுப்பதற்கான அரசாங்கத்தின் குறுகிய கால மற்றும் நீண்ட கால நிகழ்ச்சித்திட்டங்கள் குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், மாவட்ட மட்டத்தில் நிலவும் பிரச்சினைகளை குறித்த மாவட்ட செயலாளர்களிடம் ஜனாதிபதி கேட்டறிந்தார். அப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தேவையான நிதியை பெற்றுக்கொடுக்குமாறு ஜனாதிபதி நிதி அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கினார்.
மக்களுக்கு தேவையான குடிநீரை பாதுகாத்து அதன் பின்னர் விவசாய நடவடிக்கைகளுக்காக நீரை வழங்குமாறு அறிவுரை வழங்கிய ஜனாதிபதி, மக்களுக்கு குடிநீரை வழங்குவதற்கு தேவையான நீர் பௌசர்கள் மற்றும் நீர்த் தாங்கிகளை உடனடியாக குறித்த மாவட்டங்களுக்கு பெற்றுக்கொடுக்குமாறும் உத்தரவிட்டார்.
மக்களுக்கு நாளாந்தம் தேவைப்படும் நிவாரணங்களை வழங்கும்போது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஊழியர் பற்றாக்குறைக்கு இடமளிக்கக் கூடாது. அதற்கு முப்படையினரின் உதவியை தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நாளாந்தம் ஏற்படும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் அதிகாரி ஒருவரை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நியமிக்குமாறு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி, அந்த அதிகாரிகள் மாவட்ட செயலாளருடன் இணைந்து செயற்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.
வறட்சி நிலையுடன் ஏற்பட்டுள்ள சுகாதார பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தி விசேட நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சுக்கு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி, மின்சாரத்தையும் நீரையும் சிக்கனமாகப் பாவிப்பது தொடர்பாக மக்களுக்கு அறிவூட்டுவதற்காக விசேட நிகழ்ச்சித்திட்டங்களை தயாரிக்குமாறு ஊடகத்துறை அமைச்சுக்கு ஆலோசனை வழங்கினார்.
ஐக்கிய நாடுகள் சபை உலக வங்கி மற்றும் உலக உணவுத் திட்டத்தின் பிரதிநிதிகளும் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டதுடன் ஏற்படக்கூடிய வறட்சிநிலைக்கு முகம்கொடுப்பதற்கு இலங்கைக்குத் தேவையான பொருள் மற்றும் நிதி உதவிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
அமைச்சர்களான அநுர பிரியதர்ஷன யாப்பா, ராஜித சேனாரத்தன, சுசில் பிரேம ஜயந்த, ரவுப் ஹக்கீம், பீ.ஹெரிசன், ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, துமிந்த திசாநாயக்க, கயந்த கருணாதிலக்க, ரிசாத் பதியுதீன் மாகாண முதலமைச்சர்கள்,ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.அபேகோன் அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.