மத்திய அரசாங்கம் தம் நல்லெண்ணத்தை வெளிகாட்டும் ஒரு சில நடவடிக்கைகளை மாத்திரமே வடமாகாணத்தில் மேற்கொண்டிருக்கின்றது. அதனைவிட ஏனைய பெரும்பாலான விடயங்கள் தாங்கள் நினைப்பதை எங்களின் விருப்பத்தை அறியாமல் எங்கள் மீது திணிப்பதாகவே இருக்கின்றது என வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
நெடுந்தீவுக்கான போக்குவரத்து படகு நெடுந்தாரகை இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) வெள்ளோட்டம் விடப்படவுள்ளது. இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் பிறைஸ் ஹச்சீசன் யாழ். வந்துள்ள நிலையில், அவருடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முதலமைச்சர், “முன்னேற்றகரமாக நடைபெற்றிருக்கும் விடயங்கள் தொடர்பாக அவர் என்னிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.
புலம்பெயர்ந்திருக்கும் தமிழ் மக்கள் வடக்கில் முதலீடுகளை செய்யலாம் அதில் ஆட்சேபனை இல்லை என அண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தார். அந்த விடயங்கள் முன்னேற்றகரனமாக விடய ங்களாக உள்ளன. ஆனால் பெரும்பாலான மற்றைய விடயங்கள் எங்களுடைய ஒப்புதல் இல்லாமல் மத்திய அரசாங்கம் தாங்கள் நினைத்தால் செய்யும் விடயங்களாகவே இருக்கின்றன என்பதை சுட்டிக்காட்னேன்.
இதேபோல் அரசியல் ரீதியாக பேசும்போது எழுக தமிழ் மற்றும் தமிழ் மக்கள் பேரவை ஆகியன தமிழ தேசிய கூட்டமைப்புக்கு எதிரானவையா? என அவர் என்னிடம் கேட்டார். அவ்வாறில்லை இவை தமிழ் மக்கள் பேரவையும், எழுக தமிழும் தமிழ்தேசிய கூட்டமைப்பை வலுப்படுத்துவதற்காகவே என கூறியதுடன், தமிழ்மக்கள் பேரவை தேர்தல்களில் போட்டியிடபோவதில்லை என்ற உறுதிப்படுத்தலை அவர்களிடமிருந்து பெற்றதன் பின்னரே நான் தமிழ்மக்கள் பேரவையில் பங்கெடுத்தேன்” எனத் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.